உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடந்து முடிந்தது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 117 இடங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அமைத்திருக்கிறது.
அதனை அடுத்து, ஆம் அத்மி கட்சி முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் இன்று பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், இன்று பதவி ஏற்றுக்கொண்ட பகவந்த் மான், “ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றிகள். துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள். நமக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம்” என தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாப் கிராமமொன்றில் பிறந்த பகவந்த் மான், காமெடி நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். 48 வயதாகும் இவர், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சடோஜ் கிராமத்தில் ஜாட் சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும்போது காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் காமெடி நடிப்புக்காக, தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். அதனை அடுத்து அரசியலில் களம் கண்டவர்.
தனது சொந்தத் தொகுதியான சங்ரூரில் களம் கண்டார் பகவந்த் மான். பாஜக சார்பில் கூட்டணிக் கட்சியான அகாலிதளத்தின் தலைவர் அங்கு போட்டியிட்டார். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனாலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார் பகவந்த். நாடாளுமன்றத்தில் கால் பதித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் நின்றார். 1,11,111 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மக்களவையில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே எம்.பி. இவர்தான். இன்று, பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்