டெல்லி மாநிலத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தாக்கம் வட இந்தியாவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், டெல்லியில் பேட்டி அளித்த முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது, “ ஒவ்வொரு நாளும் புதிய நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. நாம் என்னதான் முயற்சிகள் செய்தாலும், சில சமயங்களில் தெய்வங்கள் நம்மை ஆசிர்வதிக்காவிட்டால் நம் முயற்சிகள் பலிக்காது. நமது ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமிதேவியின் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.






இந்தோனிஷியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு. அங்கு 2 முதல் 3 சதவீதம் மட்டுமே இந்துக்கள் வசிக்கின்றனர். அவர்கள் நாட்டு ரூபாய் நோட்டுக்களில் விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் செய்ய முடியும்போது, நம்மால் ஏன் செய்ய முடியாது..?


மத்திய அரசிற்கு இதுதொடர்பாக நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளேன்”


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும், குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பா.ஜ.க. செய்த ஒரு நல்ல வேலையை காட்டுங்கள் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வினருக்கு கேள்வி எழுப்பினார். சமீபகாலமாக தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் அர்விந்த் கெஜ்ரிவால், தீடீரென ரூபாய் நோட்டுக்களில் விநாயகர் படம் மற்றும் லட்சுமியின் புகைப்படத்தை பொறிக்க வேண்டும் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் பி அணி என்றும் அவருக்கும் எந்தவித புரிதலும் இல்லை என்றும், அவர் பாகிஸ்தானுக்கு சென்றால் தான் ஒரு பாகிஸ்தானி என்றும் எனக்கு வாக்களியுங்கள் என்றும் கேட்பார் என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.


கடந்த சில காலமாகவே ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக வீர சாவர்க்கர் படம், நேதாஜியின் புகைப்படம் என பலரது படங்கள் பொறிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.