டெல்லியில் பலமிகுந்த பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அவர்களுக்கு மாற்றாக ஆட்சியை நடத்தி வரும் கட்சி ஆம்ஆத்மி. டெல்லி மட்டுமின்றி பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.


தேசிய கட்சி அங்கீகாரம்:


இந்த நிலையில்,  இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை அளித்துள்ளது. அதேசமயம் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சி, மாநில கட்சி என்று ஒவ்வொரு கட்சிக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய கட்சி, மாநில கட்சி அந்தஸ்து பெறுவதற்கு குறிப்பிட்ட வாக்குகள் சதவீதம், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உள்ளிட்டவையை கணக்கீடு செய்து அங்கீகாரம் வழங்கப்படும். இந்த அங்கீகாரமானது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்.


இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தேசிய கட்சிக்கான அங்கீகாரம் மற்றும் மாநில கட்சிக்கான அங்கீகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாகவும், தேசிய கட்சிகளாகவும் இருந்து வந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆம் ஆத்மி:

அதேசமயம், டெல்லியில் மட்டுமின்றி பஞ்சாபிலும் ஆட்சியையும் தக்க வைத்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தேசிய கட்சி அங்கீகாரம் மட்டுமின்றி சில கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் மாநில கட்சி அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. மேற்கு வங்காளத்தில் புரட்சிகர சோஷியலிச கட்சியின் மாநில கட்சி அந்தஸ்து, மேகலாயாவில் மக்கள் குரல் கட்சி(வாய்ஸ் ஆஃப் தி பியூப்ள் பார்ட்டி) மாநில கட்சி அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


வடகிழக்கு மாநிலங்கள்:


அதேசமயம், வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் அந்த கட்சி 98 ஆயிரத்து 971 வாக்குகளுடன் 2 தொகுதிகளை கைப்பற்றியதால் மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


திரிபுரா மாநிலத்தில் முக்கிய தலைவரான பிரத்யோத் டேப் பர்மாவின் திப்ராமோதா கட்சி  கடந்த சட்டசபை தேர்தலில் 13 தொகுதிகளில் போட்டியிட்டு 20 சதவீத வாக்குகளை பெற்றதால் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பி.டி.ஏ., ஆந்திராவில் பி.ஆர்.எஸ்., மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.பி., மிசோரத்தில் எம்.பி.சி., ஆகிய கட்சிகளின் மாநில அந்தஸ்து ரத்து செய்யபப்ட்டுள்ளது. பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.


நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றால் ஒரு கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்குகிறது. இது மக்களவை அல்லது சட்டசபை தேர்தலாக இருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு மாநிலத்திலாவது 4 மக்களவை தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 2000ம் ஆண்டும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 2016ம் ஆண்டும் தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது.