இந்திய குடிமக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. வங்கி சேவை, செல்போன் சேவை என மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் அட்டை அவசியமாக உள்ளது.

இன்றே கடைசி நாள்:


ஆதார் அட்டை விதிப்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். இதற்காக ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது, செல்போன் எண் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற முக்கியமான மாற்றங்களைச் செய்து கொள்ளுமாறு மத்திய அரசு கடந்த சில மாதங்களாகவே மக்களை அறிவுறுத்தி வந்தது. இதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.


ஆனாலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்காத காரணத்தால் மத்திய அரசு கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஆதார் அட்டையை புதுப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.


வீட்டில் இருந்தே புதுப்பிப்பது எப்படி?



  • ஆதாரின் இணையதளமான uidai.gov.in என்ற இணையதளத்தில் முதலில் உள்ளே செல்லவும்.

  • உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளே நுழையலாம்.

  • பின்னர் புதுப்பிப்பு என்பதை தேர்வு செய்யவும்.

  • அதன்பின்பு, ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய பெயர் மாற்றம், குடும்ப பெயர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

  • அதற்காக கேட்கப்படும் ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • புதுப்பிப்பிக்க கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

  • பின்னர், அதை ஒரு முறை சரி பார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

  • உங்கள் மின்னஞ்சலுக்கு சேவை கோரிக்கை எண் ( SRN) அனுப்பப்படும்.

  • இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் 90 நாட்களுக்குள் பெறலாம்.


வீட்டில் இருந்து ஆதார் அட்டையை புதுப்பிக்க முடியாதவர்கள் அருகில் உள்ள இ-சேவை  மையத்திற்குச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.


ஆதார் சேவை மையத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டுமா?


ஆதார் அட்டையில் சில முக்கிய தகவல்களை வீட்டில் இருந்தபடியே மாற்றிக் கொண்டாலும், புகைப்படம் மற்றும் கை ரேகை ஆகியவற்றிற்கு ஆதார் அட்டை மையத்திற்கு சென்றுதான் மாற்ற முடியும். ஆதார் அட்டையின் இணையதளம் மட்டுமின்றி MyAadhar என்ற போர்டல் மூலமாகவும் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.   


ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள இன்று வரை கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ளலாம். நாளை முதல் ஆதார் அட்டையை புதுப்பிக்க ரூபாய் 50 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.