தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் உருவான புஷ்பா படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 5ம் தேதி வெளியானது.


கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூன்:


மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்த காரணத்தால், கடந்த 4ம் தேதி நள்ளிரவு தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. ஹைதரபாத்தில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றிற்கு தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்த 39 வயதான பெண் ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் படம் பார்க்க வந்தார்.


அல்லு அர்ஜூனை காண்பதற்காகவே அந்த திரையரங்கிற்கு அதிகளவில் ரசிகர்கள் கூடினர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெலங்கானா போலீசார் அல்லு அர்ஜூன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அல்லு அர்ஜூனை நேற்று கைது செய்தனர்.


காலையிலே விடுதலை:






4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், நாம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அல்லு அர்ஜூனை அடைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தெலங்கானா நீதிமன்றம் அவருக்கு நேற்று ஜாமின் வழங்கியது.


ஆனாலும், ஜாமின் ஆவணங்கள் அதிகாரிகளுக்குச் சென்றடைவதற்கு தாமதம் ஆன சூழலில், அல்லு அர்ஜூன் நேற்று சஞ்சல்குடா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜூன் இன்று காலை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜூன் விடுதலை செய்யப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜாமின்:


அல்லு அர்ஜூன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனியார் பாதுகாவலர்களுடன் திரையரங்கிற்கு வந்ததே, ரசிகர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாகவே, அந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர், திரையரங்க மேலாளர் மற்றும் ஊழியர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர், மேலும், அவர் அடைக்கப்பட்ட சஞ்சல்குடா சிறையின் முன்பு நேற்று இரவு அல்லு அர்ஜூன் ரசிகர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அல்லு அர்ஜூனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியபோதிலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


சுகுமார் இயக்கத்தில் வெளியாகிய அல்லு அர்ஜூனின் புஷ்பா 2ம் பாகம் படம் இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.