குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆளும் கட்சியினரான பாஜகவுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சம் பார்ப்பதாகவும் கூறி, அவரை நீக்க கோருவதற்கான நடைமுறையில் இந்திய கூட்டணியினர் இறங்கியுள்ளனர். இது, இந்திய சுதந்திர வரலாற்றில், குடியரசு துணை தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதல் முன்னெடுப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக் காலம் முடிவதற்குள் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமானால், என்ன மாதிரியான முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
1. முதலில் குடியரசு துணைத் தலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், என்பதற்கான நோட்டீசை, மாநிலங்களவை அலுவலகத்திடம், மாநிலங்களவை உறுப்பினர்கள் வழங்க வேண்டும் ( பொதுவாக மாநிலங்களை செயலாளரிடம் வழங்கப்படும் ).
2. இதையடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்ட 14 நாட்களுக்கு பிறகு, நீக்க கோருவதற்காக தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். (நோட்டீஸ் வழங்கியபின் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, இல்லையென்றால் தீர்மானத்தை கொண்டுவர முடியாது.)
3. முதலில் மாநிலங்களவையில்தான், குடியரசு துணைத் தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது அவையின் மொத்த உறுப்பினர்களில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை ( EFFECTIVE MAJORITY ). உதாரணத்திற்கு, மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர் என்றால், 5 இடங்கள் காலியாக உள்ளது என வைத்துக் கொண்டால்; 240 உறுப்பினர்களில் 121 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. விடுப்பு எடுத்தால் கணக்கில் எடுத்துக் கொள்ள படாது; காலியாக இருந்தால் மட்டுமே ( இறப்பு , நிரப்பப்படாமல் இருப்பது உள்ளிட்டவை )
4. இதையடுத்து, மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இங்கு மாநிலங்களவையைவிட சற்று வேறுபாடு இருக்கும். அதாவது, அவையில் இருக்க கூடிய நபர்களில் , பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை ( SIMPLE MAJORITY ). உதாராணத்திற்கு 543 இடங்கள் உள்ளதாக எடுத்துக் கொண்டால், 3 இடங்கள் காலியாக உள்ளது என்றும் 10 பேர் அன்றைய தினம் உடல்நிலை காரணங்களால் விடுப்பு எடுத்ததால் வரவில்லை என்றாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மீதமுள்ள 530 இடங்களில் , பெரும்பான்மைக்கு 266 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
5. இதையடுத்து, இரண்டு அவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவரது பதவி நீக்கம் செய்யப்படும் .
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி, மாநிலங்களை செயலாளரிடம், இந்திய கூட்டணியினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மாநிலங்களவையிலும், மக்களவையிலும் எதிர்க்கட்சியினருக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த தீர்மானம் தோல்வியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.