கொரோனா தொற்றின் 2 வது அலை நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு புறம் மருத்துவ சிகிச்சையும் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி பெற ஒரு அடையாள ஆவணம் தேவைப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் பொது சேவை வழங்கல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வினை கொண்டுவருவதே ஆதார் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது. ஆனால் அதில் சில ஆனால் விதிவிலக்குகளும் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லை என மக்களுக்கு மறுக்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனையடுத்து UIDAI அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஒரு குடியிருப்பாளர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின் படி அவர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மறுக்கப்படக்கூடாது என்று அதிகாரம் உள்ளது. எனவே கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு ஒரு அடையாள ஆவணம் தேவைப்படுகிறது. குறிப்பாக “ஆரோக்ய சேது“ பயன்பாட்டின்படி, ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்), பாஸ்போர்ட், ஓய்வூதிய வங்கி கணக்கு, என்.பிஆர் ஸ்மார்ட் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஏழு அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி மக்கள் தடுப்பூசிக்கு தங்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பெருந்தொற்று சமயத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தும் போது யாருக்கும் எந்த சேவையும் நன்மையும் மறுக்கப்பட மாட்டாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதோடு ஒருவருக்கு ஆதார் இல்லையென்றால் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றிகரமாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது ஆதார் சட்டம், 2016 இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பர் 19 தேதியிட்ட அமைச்சரவை செயலக அறிக்கையின் ஆகியவற்றின்படி சேவையை வழங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் உள்ளது.
குறிப்பாக தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் பொது சேவை வழங்கல்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கே ஆதார் கட்டாயம் என்று கூறிய நிலையில் இதற்கான விதிவிலக்குகளும் உள்ளன. இந்நிலையில் ஏதோ சில காரணங்களுக்கு ஆதார் இல்லை என மறுக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.