ஆவணங்களிலேயே முக்கியமானதாக இருக்கிறது ஆதார். எதாவது ஒரு தேவைக்காக அரசு அலுவலகங்களோ, தனியார் நிறுவனங்களையோ அணுகினால் அவர்கள் முதலில் கேட்கும் ஆவணமும் ஆதார் தான். இந்திய அரசால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. தேர்தலில்கூட வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த அளவுக்கு ஆதார் அடையாள அட்டை மிக முக்கியமானது. 






ஆனால் இந்த ஆதார் அட்டை ப்ரூஃப்தான் தற்போது செல்லாது எனக் கூறியிருக்கிறது பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம். நவ்தீப் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. பெற்றோர் விருப்பமின்றி திருமணம் செய்து கொண்ட இருவர் தங்களது உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தனர் அந்த வழக்கில்தான் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்துத்தெரிவித்துள்ள நீதிமன்றம், ‘இந்தத் திருமணம் செல்லுமா செல்லாதா என ஆராயாமல்தான் இந்த நீதிமன்றம் இருவருக்கும் பாதுகாப்பு அளித்துள்ளது. ஒருவேளை மனுதாரர்கள் இருவரில் ஒருவர் கூட திருமணம் நிரம்பிய வயதை அடையாமல் இருந்தால் இந்த விவகாரம் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் அந்த சமயத்தில் இந்த பாதுகாப்பு செல்லாது. மேலும் மனுதாரர்களின் வயது குறித்து ஆதார் கார்டு தவிர வேறு எந்த அடையாள அட்டையும் இல்லை. ஆனால் வயதைக் கண்டறிவதற்கான வலுவான ஆதாரமாக ஆதார் அட்டையை எடுத்துக்கொள்ள முடியாது’ எனத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக மெகாலயா உயர்நீதிமன்றம் அண்மையில் அந்த மாநில அரசுக்கு ஆதார் அட்டை தொடர்பாக இதே போன்றதொரு உத்தரவை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  அந்த நீதிமன்றத்தின் உத்தரவில், ‘ஆதாரை மட்டும் அடையாள அட்டையாகக் காண்பிக்கச் சொல்லிக் கேட்கவேண்டாம் நம்மிடம் அதுதவிர்த்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறுபல அடையாள அட்டைகளும் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டிருந்தது.



இதற்கு முன்பு அளித்த சர்ச்சை தீர்ப்புகள்: 


முன்னதாக, இதே பஞ்சாப் நீதிமன்றம் தான் லிவிங் டுகெதர் தவறு என உத்தரவிட்டது சர்ச்சைக்குள்ளானது.


பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த குல்சா குமாரி மற்றும் குர்வீந்தர் சிங் இருவரும் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். குல்சாவுக்கு வயது 19 மற்றும் குர்வீந்தருக்கு வயது 22. பெற்றோர் சாதி மறுப்புத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு அண்மையில் வெளியேறிய இருவரும் அந்த மாநிலத்தின் தாம்தாரி மாவட்டத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே குல்சா குமாரியின் பெற்றோரால் தங்களுக்கு ஆபத்து என்றும் அதனால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இணையர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாப் மாநிலக் காவல்துறையை அணுகியுள்ளனர். எனினும் அவர்களது பெற்றொரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்த நிலையில் மாநில உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.


 


கடந்த 11 மே அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதான் தலைமையிலான அமர்வு,’மனுதாரர்களான குல்சா குமாரி மற்றும் குர்வீந்தர் இருவரும் இந்த மனுவின் மூலம் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்பதன் வழியாகத் தாங்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதை அங்கீகரிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் அது சமூகத்துக்கும் ஒழுக்கத்துக்கும் புறம்பானது.அதனால் மனுவில் கோரப்படும் பாதுகாப்பை வழங்கமுடியாது’ எனத் தீர்ப்பளித்தது.