இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கண்ணையா குமார் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செப்டம்பர் 14 அன்று, கண்ணையா குமார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளதையடுத்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


கண்ணையா குமாருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிப்பதில் பிரச்னைகள் இருப்பதால், ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்குள் நுழைவது குறித்து பேசியுள்ளதாகத் தெரிகிறது. 


எனினும், இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவர் `கண்ணையா குமார் எங்கள் கட்சியின் தேசியப் பொதுக் குழு சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினார் என்பதை மட்டுமே என்னால் உங்களிடம் சொல்ல முடியும்’ என அவர் தெரிவித்துள்ளார். ‘



இதுகுறித்து கண்ணையா குமாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும், பீகார் மாநில அரசியலில், கண்ணையா குமார் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்க முயன்று வருவதாக, அம்மாநிலக் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறுகின்றனர். கண்ணையா குமார் மட்டுமின்றி, குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியையும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குஜராத் தேர்தலில் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக, வட்காம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாதது குறிப்பிடத்தக்கது. 


சமீப ஆண்டுகளில் ஜோதிராதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி முதலான பிரபலமான முகங்களை இழந்துள்ள காங்கிரஸ் கட்சிக்குக் கண்ணையா குமாரின் வருகை பலம் தருவதோடு, இளைஞர் ஒருவரின் முகத்தையும் பெற்றுத் தரும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. 



எனினும், பீகார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கண்ணையா குமாரின் சர்ச்சைக்குரிய கடந்த காலப் பின்னணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாட்னா அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சண்டையில் ஈடுபட்டதற்காக அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை முதலானவற்றால் அவர் தேவையில்லாத சுமையாக இருக்கக் கூடும் எனக் கருதுகின்றனர். 


கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிபிஐ - எம்.எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. போட்டியிட்ட 144 தொகுதிகளில் பாதிக்கும் மேலான தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வென்றிருந்தது. சிபிஐ - எம்.எல் கட்சி 19 வேட்பாளர்களை நிறுத்தி, அதில் 12 பேர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.