கோடிக்கணக்கான மக்களின் ஆதார் அட்டையைத் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
மத்திய அமைச்சகம் அல்லது துறை தாண்டி, ஆதார் அட்டையைத் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தலாம். எனினும் உரிய காரணங்களோடு கூடிய முன்மொழிவை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் நல்லாட்சி (சமூக நலன், கண்டுபிடிப்பு, அறிவு) திருத்த விதிகள், 2025 (Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Amendment Rules, 2025) என்று அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்களின் விவரம் கசிவதைத் தடுக்கும் வகையில் நல்லாட்சி அளிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எப்போது கொண்டு வரப்பட்டது?
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதுகுறித்த திருத்தத்தை நேற்று (ஜனவரி 31, 2025) கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்த விதிமுறைகளில், “விதி 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காக ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பும் அமைச்சகம் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசு, ஆதார் அங்கீகாரம் கோரப்படும் நோக்கத்திற்காக நியாயப்படுத்தலுடன் ஒரு திட்டத்தைத் தயாரித்து, UIDAI-க்கு பரிந்துரை செய்வதற்காக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருத்தப்பட்ட விதிகள் சொல்வது என்ன?
திருத்தப்பட்ட விதிகளில், “அமைச்சகம் அல்லது துறையைத் தவிர வேறு எந்த நிறுவனமும் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பினால், விதி 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காகவும், மாநில நலனுக்காகவும் கோரப்பட்ட அங்கீகாரம் தொடர்பாக நியாயத்துடன் ஒரு திட்டத்தைத் தயாரித்து, அதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது பொருத்தமான அரசுத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதற்கான வரைவறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனி யாரெல்லாம் ஆதாரைப் பயன்படுத்த முடியும்?
திருத்தப்பட்ட விதிகளின் மூலம் உணவகங்கள், சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை, போக்குவரத்து, இ- காமர்ஸ் உள்ளிட்ட தனியார் துறைகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, பலன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வங்கிகளும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே ஆதார் பயன்படுத்தும் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.