உலகின் இரண்டாவது மிகப்பெரிய ராணுவத்தை உடைய நாடு இந்தியா.2019ம் ஆண்டில் உலக அளவில் ராணுவ முதலீடுகளில் முன்னிலை வகிக்கும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. மேலும் தனக்கான ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் முனைப்பாக இறங்கியுள்ளது நாடு. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா தனது பாதுகாப்புத்துறையில் இத்தனை மாற்றங்களைக் கண்டுள்ளதற்கு அதற்கு ராணுவம் என்கிற ஒற்றை அடித்தளத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸ் என்னும் தனிமனிதர் இன்றியமையாத காரணம் என்றால் அது மிகையில்லை. 


1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ந் தேதி ஒடிசா மாநிலம் கட்டக்கில் 14 பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார் நேதாஜி.அவரது தந்தை ஜானகிநாத் போஸ் அந்தக் காலத்திலேயே பெரிய வழக்கறிஞராக அறியப்பட்டவர், 14 பிள்ளைகள் பெற்ற பின் வேறு என்ன வேலைகளைச் செய்ய நேரமிருக்கும் வீட்டைப் பார்த்துக்கொண்டார் அவரது தாய் பிரபாவதி தேவி. 




தனது அப்பாவின் வழியைப் பின்பற்ற நினைத்த போஸ் 1919ம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் போட்டியிட்டு தேர்ச்சி பெறுவதற்காக இங்கிலாந்தில் பயிற்சி எடுக்கச் சென்றார். 1920ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதிய அவர் மெரிட் பட்டியலில் நான்காவதாக வந்து தேர்ச்சி பெற்றார். 


1919ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான பேரைக் கொன்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. காந்தி , நேதாஜி போஸ் என்கிற இருபெரும் அரசியல் துருவங்களை உருவாக்கியது இந்த சம்பவம்தான். ஜெனரல் டயர் நடத்திய கொலைவெறியாட்டத்துக்குப் பிறகு முதன்முறையாகப் பஞ்சாப் சென்ற காந்தி, டயர் மற்றும் பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யச் சொல்லி பிரிட்டிஷ் அரசுக்கு முறையிட்டார். ஆனால் நீதி கிடைக்கவில்லை. கிடைக்கப்பெறாத நீதி காந்தியை அகிம்சை வழியிலான ஒத்துழையாமையைக் கையில் எடுக்கச் செய்தது, நேதாஜி என்னும் சிவில் சர்விஸ் தேர்வு மாணவனை நேரெதிராக ஆயுதப் போராட்டத்தை நம்பச் செய்தது.


ஒரு கன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னம் காட்டும் காந்தியின் அகிம்சை கொள்கை மட்டுமே இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்துவிடவில்லை என நேதாஜியின் மகள் அனிதா போஸ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதை ஆமோதிக்கத்தான் வேண்டும். இந்திய சுதந்திரம் என்னும் கடிவாளத்தை இழுத்துப் பூட்ட காந்தியின் அகிம்சை, போஸின் ஆயுதம் என இரு துருவங்களும் அத்தியாவசியமாக இருந்தது. 




படுகொலையின் தாக்கத்தால் தனது பயிற்சிக்காலத்தில் இருந்து பாதியிலேயே நாடு திரும்பினார் நேதாஜி. காந்தியின் கீழ் தேசிய காங்கிரஸில் இணைந்தார்.அவரது தலைமைத்துவப் பண்பால் காங்கிரஸில் இரண்டு முறைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் காந்தியின் அகிம்சை வாதக் கொள்கை அவருக்கு ஏற்புடையதாக இல்லை. காங்கிரஸில் இருந்து வெளியேறினார். 


பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சமயம் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை முடக்கியது, இரண்டாம் உலகப் போரை ஒட்டி இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைக்கச் சொல்லி ஆங்கிலேயர்களுக்கு மிரட்டல் விடுத்துக் கெடு விதித்தது என பல்வேறு நிலைகளில் அவருக்கு காந்தியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை தொடர்ந்து எதிர்த்ததால் கிட்டத்தட்ட 11 முறை சிறையில் அடைக்கப்பட்டார் போஸ். காங்கிரஸில் இருந்து வெளியேறிய பின் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் என்னும் கட்சியைச் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தார். அதற்காகத் தனி இயக்கத்தை உருவாக்கிப் போர் புரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் அகிம்சை வாதத்தில் நம்பிக்கை விடுத்த பல இளைஞர்கள் நேதாஜியின் கொல்கத்தா வீட்டை நோக்கிப் படையெடுத்தார்கள். அச்சம் கொண்ட ஆங்கில அரசு நேதாஜியை வீட்டிலேயே சிறைபடுத்தியது.


சிறையில் இருந்து தப்பித்து ஆஃப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்குத் தப்பித்துச் சென்றார் அவர். எதிரிக்கு எதிர் நண்பன் என்கிற வகையாக ஜப்பான் மற்றும் ஜெர்மனி அரசின் உதவியை ஆங்கில அரசுக்கு எதிராக நாடினார்.  1943ல் சிங்கப்பூர் சென்ற அவர் போர்காலத்தில் சிறைபடுத்தப்பட்ட இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அந்த ராணுவம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளை மீட்டது. சிங்கப்பூரில் இருந்து ராணுவ அலுவலகம் ரங்கூனுக்குச் சென்றது.  அதே சமயம் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும் ஜப்பானும் தோல்வி அடையவே தைவானில் நடந்த விமான விபத்தில் 1945ல் நேதாஜி இறந்ததாக அறிவிக்கப்பட்டார். நேதாஜியின் உடல் இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை. உடல் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் இந்தியா நமது நாடு எனப் பெருமை கொள்ளும் ஒவ்வொரு நிமிடங்களிலும் நாம் இந்தியர்கள் என கர்வம் கொள்ளும் அத்தனை நொடிகளும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் அனைவரது நினைவிலும் தங்கியிருப்பார் என்பது நிதர்சனம்.