நாம் அன்றாடம் மேற்கொள்ளும் காலை 9 மணி முதல் மாலை 5 வரையிலான பணி மீது நம்மில் பலருக்கும் அதிருப்தி இருந்தாலும், அதனைக் கைவிட்டு புதிதாக ஏதேனும் முயற்சி செய்யும் தைரியம் நமக்கு இருக்காது. எனினும், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த இரண்டு பொறியியல் பட்டதாரிகள் தங்கள் சம்பளம் மீதான அதிருப்தி காரணமாக, பணியில் இருந்து விலகி உணவு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரோஹித், சச்சின் ஆகிய இரு பொறியியல் பட்டதாரிகளும் இணைந்து சைவ பிரியாணி கடை ஒன்றைத் திறந்து வைத்திருப்பதோடு, தங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 வரையிலான பணியை விட இது மகிழ்ச்சி தருவதாகக் கூறியுள்ளனர். `எஞ்சினீயர்ஸ் வெஜ் பிரியாணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இவர்களின் கடை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



இந்த இருவரும் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் பொறியியல் படிக்க காலம் செலவிட்டுள்ளனர். ரோஹித் பாலிடெக்னிக் மாணவராக இருந்த போது, சச்சின் பி.டெக் பயின்றுள்ளார். எனினும் இருவரும் பணியில் சேர்ந்த பிறகு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பணியில் இருந்து விலகியுள்ளனர். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், புதிய வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 


அரை ப்ளேட் பிரியாணி 50 ரூபாய் எனவும், முழு ப்ளேட் பிரியாணி 70 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள பட்டதாரிகள் இருவரும், ஸ்பெஷல் க்ரேவி வெஜ் பிரியாணி, அசாரி வெஜ் பிரியாணி என இருவகை பிரியாணிகளை விற்பனை செய்வதாகவும், நல்ல தரமான அரிசியை சமையலுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். இருவரும் தற்போது நல்ல லாபம் பெற்று வருவதால் வியாபாரத்தை மேலும் பெருக்கப் போவதாக இருவரும் தெரிவித்துள்ளானர். 



சோனிபாட் நகரத்தின் முக்கிய இடங்களில் இவர்களின் நகரும் ஹோட்டல் இடம்பெற்றுள்ளது.