போர் காரணமாக உக்ரைனில் படித்துத் தாய்நாடு திரும்பிய மாணவர்களின் நலனுக்காக கேரள அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுப்பதாக அறிவித்தது. தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தாக்குதலைத் தொடங்கினார். ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த 15 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின்மீது குண்டு வீசிய காட்சிகளும் வைரலாகின. 


உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயிலச் சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 


இந்த சூழலில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் சொந்த மாநிலங்களில் படிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் உக்ரைனில் படித்துத் தாய்நாடு திரும்பிய மாணவர்களின் நலனுக்காக கேரள அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேரளாவின் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’உக்ரனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இங்கே தங்களின் கல்வியைத் தொடர்வது சிக்கலான விஷயம். அவர்கள் ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடர்வார்களா அல்லது வேறு முறையைப் பின்பற்றலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை. மத்திய  -  மாநில அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இது எளிதான ஒன்றல்ல. 


நாடு முழுவதும் இவ்வாறு உள்ள 18 ஆயிரம் மாணவர்களைப் பற்றி பேசி வருகிறோம். இதில் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய, விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். 


நம்முடைய கல்லூரிகளில் இந்த மாணவர்களுக்கு இடம் கொடுப்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஏனெனில் 100 அல்லது 200 மாணவர்களைப் பற்றி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. அதனால் அவர்களின் படிப்புக்கு உதவ கேரளாவில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பிரச்சினைகளைக் களைய சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உக்ரைன் மாணவர்கள் தொலைத்த சான்றிதழ்களைத் திரும்பப் பெறவும் வழிவகை செய்யப்படும்.’’


இவ்வாறு நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை அறிய ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண