காடுகளும், காட்டில் வாழும் உயிர்களும் நாம் நினைப்பதற்கு ஏற்றவாறு வாழ்வதில்லை. வன விலங்குகளின் செயல்பாடுகளை முழுவதுமாகப் பார்வையிட வேண்டும் என்றால் அதற்காக நாம் அசாத்திய பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். நாம் நமது கண்ணால் பார்க்க முடியாத அதிசயமான பல்வேறு நிகழ்வுகளை, காடுகளில் இருந்து பல்வேறு புகைப்பட கலைஞர்களும், வீடியோ கலைஞர்களும் நமக்குப் பதிவு செய்து தருகின்றனர். இத்தகைய கலைஞர்களுக்கு நாம் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும்
இந்நிலையில் சமீபத்தில் சிறுத்தை, மான் ஆகியவற்றிற்கு இடையிலான வேட்டை குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிறுத்தை ஒன்று தனது பொறுமையின் காரணமாக, அது குறிவைத்த மானை வேட்டையாடியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் தங்கள் இரையைக் குறிவைத்தால், அவற்றைத் தப்ப விடாமல் வேட்டையாடும் வழக்கம் கொண்டவை. இந்த விலங்குகளின் உடல்வாகு, அவற்றின் வேகம் முதலானவை வேட்டைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. இந்த வீடியோவில் மரத்திற்குப் பின் மறைந்திருந்த சிறுத்தை, மானைக் குறிவைக்கிறது. தான் இரையாகப் போகிறோம் என்பதை உணராத மான், அங்கிருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறது. மரத்தைச் சுற்றி மெதுவாக நடக்கும் சிறுத்தை, தொடர்ந்து மானைக் குறிவைத்து துரத்திப் பிடித்து, இறுதியாக வேட்டையாடி வெற்றி பெறுகிறது.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் இல்லை. மேலும், இதனை ஒரிசாவைச் சேர்ந்த இந்திய வனப் பணி அதிகாரி சுசாந்த் நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 54 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சுசாந்த் நந்தா இந்த வேட்டையை `பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட கச்சிதமான தாக்குதல்’ எனக் குறிப்பிட்டிருப்பதோடு, அதனைப் படம் பிடித்தவரையும் பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை வாட்சாப் செயலியில் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிராமம் ஒன்றில் பாதையில் புலி ஒன்று செல்வதைப் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபடி பார்த்து அச்சப்படும் வீடியோ ஒன்றையும் சமீபத்தில் இந்திய வனப் பணி அதிகாரி சுசாந்த் நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.