குஜராத் கிராமம் ஒன்றில் ஆள்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் மீட்கப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது அதே விவகாரத்தில் மீட்கப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் கவனித்துக் கொள்ளும் படம் சமூக வலைத்தளங்களில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்பக்கத்தில் ராணுவ அதிகாரியும், அவரது கைகளில் மீட்கப்பட்ட குழந்தையும் இருக்கும் இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது. பிற அதிகாரிகள் இருக்க, அவர் குழந்தை நலமாக இருக்கிறதா என்பதை சோதித்துக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படம் இருக்கிறது.
குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது ட்விட்டர் பக்கத்தில், `உணர்வுகளும், கடமையும் ஒன்றாக அமையும் போது... இந்திய ராணுவத்திற்குப் பாராட்டுகள்!’ எனக் குறிப்பிட்டு, இந்தப் படங்களைப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சுமார் 20 ஆயிரம் லைக்களையும், சுமார் 2 ஆயிரம் ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. பலரும் தங்கள் நெகிழ்ச்சியான கமெண்ட்களையும் இந்தப் பதிவில் எழுதியுள்ளனர்.
`இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்!’ என்றும், `மருத்துவர்களின் படை மட்டுமின்றி, இதுபோன்ற சூழலை ராணுவப் படையினரும் எதிர்கொள்ள முடியும்.. ராணுவத்தினருக்குப் பாராட்டுகள்’ என்றும், `உங்களால் பெருமை கொள்கிறோம், கேப்டன்’ என இந்தப் படத்தில் இருக்கும் அதிகாரியையும் பாராட்டியும் பல்வேறு பயனாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 7 அன்று, குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் உள்ள வயலில் ஆள்துளைக் கிணற்றில் இரண்டு வயது சிறுவன் சிவம் விழுந்து சிக்கிக் கொண்டார். தன் பெற்றோர் கூலிகளாகப் பணியாற்றிய வயலில் சிறுவன் சுமார் 20 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படைக்குத் தகவல் அனுப்பப்பட்டது. ராணுவம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம், கிராமத்தினர் முதலான அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் 3 மணி நேரங்கள் போராடி, ஆழ்துளைக் கிணற்றிற்குள் விழுந்து சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்