உத்தராகண்ட மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் தொடர்ச்சியாக நிலம் சரிந்ததன் விளைவாக அங்குள்ள சுமார் 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 






உள்ளூர் மக்களின் பல நாள் போராட்டங்களுக்குப் பிறகு, உத்தரகாண்ட் அரசாங்கம் ஜோஷிமத்தில் உள்ள குடும்பங்களை நேற்று வெளியேறத் தொடங்கியது, அங்கு ஆழமான விரிசல்கள் உருவாகி நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மாவட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  




மேலும் நிலச்சரிவு காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்பட்ட மக்கள் நேற்று இரவு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். கிட்டத்தட்ட 47 குடும்பங்கள்  (நேற்று இரவு)  பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இமயமலை நகரமான ஜோஷிமத்தில் நிலம் சரிந்ததன் காரணத்தைக் கண்டறிய நிபுணர்கள் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.




வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் காரணமாக 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்தப் பகுதியில் உள்ள மக்கள்தொகையில் 10 சதவீதமாகும். அனைத்து வீடுகளும் நகராட்சியால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று நகராட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த நிலையில், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "நான் விரைவில் ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று சூழலை கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். அதுகுறித்த அனைத்து அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நான் ஜோஷிமத் நகராட்சித் தலைவர் சைலேந்திர பவாருடன் சூழல் குறித்து கேட்டறிந்துள்ளேன்" என்றார். 


இதற்கிடையில், நிலநடுக்கம் உருவாகும் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை அளித்துள்ளது. சாமோலியின் மாவட்ட நீதிபதி, இணை நீதிபதி தீபக் சைனி என்பவரை ஜோதிர்மத்தின் நிலவரத்தை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி நியமித்துள்ளார்.






எதிர்ப்புகளுக்கு மத்தியில், நேற்று சாமோலி நிர்வாகம் "மூழ்கிக் கொண்டிருக்கும்" நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க முடிவு செய்தது. NTPC மற்றும் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் (HCC) பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2,000 வீடுகளை முன்கூட்டியே கட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எல்லைச் சாலைகள் அமைப்பின் (bro) ஹெலாங் புறவழிச்சாலை கட்டுமானம், தபோவன்-விஷ்ணுகட் ஹைடல் திட்டத்தின் பணிகள் மற்றும் நகராட்சியால் மேற்கொள்ளப்படும் பிற கட்டுமானப் பணிகள் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது.