தன்பாலின திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் , ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.


தன்பாலின ஜோடிகள்:


சமீபத்தில் கூட தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றயது. இதையடுத்து, தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தன்பாலீர்ப்பு கொண்ட நான்கு ஆண் தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன.


ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


தன்பாலின திருமணம்:


இந்நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தன்பாலின திருமணம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கே மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனுக்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 


இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பார்திவாலா ஆகியோர் இடம்பெற்ற அமர்வு விசாரணை செய்தது. "பிற உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எந்த ஒரு மனுதாரரையும் விட்டு விடாமல் மனுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


விசாரணை


கடந்த நவம்பர் 25ஆம் தேதி, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


முன்னதாக, தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் தற்போதுள்ள திருமணச் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள கூடாது என கூறி மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இத்தகைய மாற்றம், நாட்டில் உள்ள தனிப்பட்ட சட்டங்களின் சமநிலையில் முழுமையான அழிவை ஏற்படுத்தும் என வாதம் முன்வைத்தது.