தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். அதிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
மக்கள் போராட்டமும் சாதகமான தீர்ப்பும்:
ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகள் வதைக்கப்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் ஒன்று கூடி பெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தது. பின் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆனால் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக கூறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கே.எம் ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த மே 18 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை என கூறி தீர்ப்பை வழங்கியது. மேலும் கர்நாடகாவில் நடைபெறும் கம்பாலா மற்றும் மகாராஷ்டிராவில் நடைபெறும் மாட்டு வண்டி போட்டிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பீட்டா அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறு ஆய்வு மனுவில் இடம்பெற்றிருப்பது என்ன?
அந்த மனுவில், ”2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு, கம்பாலா போட்டிகளை நேரில் பார்த்து ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் பரீசிலனை செய்யவில்லை. இந்த தீர்ப்பில் மிகப்பெரிய சட்ட தவறு நடந்துள்ளது. நீதியும் தவறியுள்ளது” என கூறப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தையும், கம்பாலா போட்டிகளை அனுமதிக்கும் கர்நாடகா அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் இடம் பெற்றுள்ளது. இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 199 கன அடியில் இருந்து 142 கன அடியாக குறைவு..