டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். 


நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க திட்டம் வகித்து வருகின்றன.  அந்த வகையில், மத்தியில் ஆளும் பாஜக கட்சி தங்களது கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து இன்று டெல்லியில் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. 


டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்கின்றனர். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக கட்சியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறது. அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். 


இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல இருப்பதாகவும், மாலை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த கூட்டத்திற்குபிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (19ம் தேதி) தமிழ்நாடு திரும்புகிறார். டெல்லியில் இருந்து அவர் நேராக கோயம்புத்தூர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்: 


மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பீகாரில் முதல் கூட்டத்தை நடத்தின. அதனை தொடர்ந்து, நேற்றும் - இன்றும் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் 2வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 


தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக:


இந்தியாவில் உள்ள மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட மற்றும் தனிப்பட்ட வியூகங்களை அமைத்து, ஒவ்வொரு மாநிலங்களிலும் காலூன்றி வருகிறது பாஜக. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக பார்க்கப்படும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை பெறும் முயற்சிகளும் நடத்து வருகிறது. 


அதேபோல, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து, கூட்டணியை பலப்படுத்தும் முதல் நடவடிக்கையாக டெல்லியில் இன்று பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. பி. நட்டா, "பல ஆண்டுகளாக பாஜக கூட்டணியின் எல்லை விரிவடைந்துள்ளது. அதன் தேவை அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் நேர்மறையான தாக்கம் காரணமாக பெரும் உற்சாகம் உள்ளது" என்றார்.