உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த கோயிலில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை திறந்து வைத்தார். 


அயோத்தி ராமர் கோயில்:


இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இன்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. 


இதனிடையே அயோத்தி மட்டுமல்லாது நாடு முழுவதும் ராமர் கோயில்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், பஜனைகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது. மேலும் கோயில்களில் ராமர் கோயில் விழா நேரலையும் செய்யப்பட்டது. இப்படி மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ராமாயணம் நடிக்கும்போது மாரடைப்பு:


அங்குள்ள பிவானி நகரில் ஜவஹர் சௌக் பகுதியில் நேற்று முன்தினம் கம்ப ராமாயணம் நாடகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். அப்போது ராமருக்கு முடிசூட்டும் நிகழ்ச்சி காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நாடகத்தில் அனுமன் கேரக்டரில் ஹரிஷ் என்பவர் நடித்தார். 






மாரடைப்பால் மரணம்:


அப்போது ராமர் முடி சூட்டு விழா பாடல் ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலின் முடிவில் அனுமனாக நடித்த ஹரிஷ் ராமரின் பாதத்தில் அமர வேண்டும். அதன்படி வந்து அமர்ந்த அவர் திடீரென சரிந்து ராமராக நடித்தவரின் பாதத்தில் விழுந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனுமன் வேடத்தில் ராமரிடம் ஹரீஷ் ஆசீர்வாதம் வாங்குகிறார். இது நாடகத்தின் ஒரு பகுதி என நம்பி ஆர்வமுடன் கண்டு களித்தனர். சில நொடிகளுக்குப் பின் அந்த நாடக்குழுவில் உள்ள நபர் ஹரீஷை எழுப்ப முயன்றபோது அவர் அசையாமல் கிடந்துள்ளார். 


உடனடியாக அங்கிருந்தவர்கள் ஹரீஷை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராம பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஹரீஷ், கடந்த 25 ஆண்டுகளாக அனுமன் வேடத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.