India Stock Market: ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தை என்ற இடத்தை இந்தியா எட்டியுள்ளது.


உலகின் 4வது மிகப்பெரிய பங்குச் சந்தை:


ப்ளூம்பெர்க்ஸ் அறிக்கையின்படி, ஜனவரி 22ம் தேதியன்று அன்று சந்தை மூலதனத்தின் மூலம் இந்தியா ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. செவ்வாயன்று இந்தியாவின் சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதேநேரம்,  ஹாங்காங்கின் பங்குச் சந்தை மதிப்பு 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ​​அமெரிக்கா 50.86 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தையாக உள்ளது. அதைதொடர்ந்து, சீனா 8.44 டிரில்லியன் மற்றும் ஜப்பான் 6.36 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குச் சந்தை மதிப்பாக கொண்டுள்ளது. இதில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு சுமார் 359 லட்சம் கோடியாக உள்ளது. 


எதிர்பார்ப்பை தரும் இடைக்கால பட்ஜெட்: 


2023 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களின் ஏற்றம் மற்றும் அதிகரித்த உள்நாட்டு பங்கேற்பு காரணமாக, இந்திய பங்குகள் புதிய உச்சத்தை எட்டியது. இதனால், இந்திய பங்குச் சந்தையின் மூலதனம் மதிப்பு டிசம்பர் 5 அன்று முதல் முறையாக 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், HDFC வங்கியில் நடப்பாண்டில் எதிர்பார்த்ததை விட குறைவான வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய மத்திய வங்கிகளால் எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதக் குறைப்புக்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதோடு, பிப்ரவரி 1-ம் தேதி வெளியாக இருக்கும் பட்ஜெட் அறிவிப்பு இந்திய சந்தையின் எழுச்சியை மேலும் தூண்டும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


2023ம் ஆண்டில் வளர்ச்சி:


2023 ஆம் ஆண்டில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே முறையே 18.8 சதவிகிதம் மற்றும் 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன. அதே நேரத்தில் மும்பை பங்குச்சந்தையில்  மிதமான சந்தை மூலதனம் மற்றும் சிறிய மூலதனப்பிரிவு முறையே 45.5 சதவிகிதம் மற்றும் 47.5 சதவிகிதம் ஏற்றம் பெற்றுள்ளன. டாடா மோட்டார்ஸ் 101 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 88 சதவீதமும், என்டிபிசி 87 சதவீதமும், எல்&டி 69 சதவீதமும், கோல் இந்தியா 67 சதவீதமும் உயர்வை சந்தித்துள்ளது.


தொடர் ஏற்றத்தில் இந்தியா:


ஹாங்காங்கின் ஹெங் செங் பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதோடு,  ஷாங்காய் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நஷ்டத்தைக் கண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஏற்றம் கண்டு வருவதோடு,  தொடர் வளர்ச்சிக்கும் தயாராக உள்ளன. தேர்தலுக்கு முந்தைய வலுவான நம்பிக்கைகள், மேக்ரோ பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் வட்டி விகிதக் குறைப்புகள் நாட்டின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது.