ஜூன் மாதம் முழுவதும் தன்பாலீர்ப்பாளர்கள் பலரும் இந்த மாதம் சுயமரியாதை மாதமாக அனுசரிப்பதால் தங்கள் குடும்பத்தினர் வழங்கிய ஆதரவு குறித்து பலரும் நெகிழ்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பல்வேறு நினைவலைகள் பதியப்பட்டு வரும் நிலையில், ட்விட்டரில் சமான் அஷ்ரவி என்ற நபர் தன்பாலீர்ப்பாளரான தனது தாத்தாவின் காலம் கடந்த காதல் கதையைப் பதிவு செய்துள்ளார். தனது தாத்தாவின் காதலர் பிரபல இசையமைப்பாளர் ஜான் காண்டெர் எனக் கூறியுள்ளார் சமான் அஷ்ரவி. பிராட்வே மியூசிக்கல்ஸ் ஆல்பம், 1977-ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் மார்டின் ஸ்கார்சீஸ் இயக்கிய `நியூ யார்க், நியூ யார்க்’ படத்தின் தீம் பாடல் முதலானவற்றிற்கு இசையமைத்தவர் ஜான் காண்டெர். ஜான் காண்டெர் தனது தாத்தாவுக்கு எழுதிய பாடல் ஒன்றைக் கடந்த ஆண்டு, கொரோனா பெருந்தொற்றின் போது கண்டுபிடித்த சமான் அஷ்ரவி அதனைத் தொடர்ந்து ஜான் காண்டெரை நேரில் சந்தித்துள்ளார். 


இதுகுறித்து ட்விட்டரின் பதிவிட்டுள்ள சமான் அஷ்ரவி, `அந்தப் பாடல் வெறும் ஒரு பாடல் மட்டுமின்றி, அவர் தனது 22வது வயதில் எழுதிய `அவர் பாய்’ என்ற முழு மியூசிக்கல்.. அதுமட்டுமின்றி, அதில் எனது தாத்தா முதன்மை வேடத்தில் நடிக்க வேண்டும் எனவும் அவர் விரும்பினார்’ எனக் கூறியுள்ளார். 



தொடர்ந்து, `நண்பகல் உணவுக்குப் பிறகு, ஜான் என்னிடம் அவரது உறவு குறித்து மனம் திறந்து பேசினார்.. `நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருந்தோம்.. பொய் பேசாமல் இருப்பது மட்டுமின்றி, நாங்கள் யாராக இருக்கிறோம்.. யாராக மாறிக் கொண்டிருக்கிறோம் முதலானவை குறித்தும் உண்மையாக இருந்தோம்.. உன் தாத்தா எனக்குக் கிடைத்த பெரிய பரிசு’ என ஜான் என்னிடம் கூறினார்’ எனவும் பதிவிட்டுள்ளார் சமான் அஷ்ரவி.






சமீபத்தில், தனது திருநங்கை மகள் மீதான தாய் ஒருவரின் பாசம் ட்விட்டரில் பலரையும் கண்கலங்க வைத்தது. @SebellaAnne என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பயனாளர் ஒருவர், தனது தாய் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததைப் பகிர்ந்திருந்தார். அதில், `எனக்கு திருநங்கை மகள் இருக்கிறாள். என் வாழ்வின் மிக்க அன்புக்குரியவள் அவள். நாங்கள் ஒரே உயிரைப் பகிர்கிறோம்.. அவளை இழப்பது என்பது என் மனதை என்றென்றும் நொறுக்கிவிடும்.. உன் சுயமரியாதையை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்’ என அவரது பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்தப் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.