ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழு மாதங்கள் காத்திருந்தும் சர்வீஸ் மையத்தில் தீர்வு கிடைக்காததால், கோபமடைந்த உரிமையாளர் தனது ஓலா S1 Pro ஸ்கூட்டரையே தீ வைத்து எரித்தார். சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது?
ஒரு வருடத்திற்கு முன்பு ஓலா S1 Pro ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளருக்கு, ஐந்து மாதங்களில் பேட்டரி டிஸ்சார்ஜ் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால், நிறுவனத்தின் விதிமுறையின்படி “பேட்டரி டிஸ்சார்ஜுக்கான உத்தரவாதம் இல்லை” என கூறி, புதிய பேட்டரிக்காக ரூ.30,000 வசூலிக்க முன்மொழிந்தது. கட்டாயத்தின் பேரில் வாடிக்கையாளர் அதனை ஏற்றுக்கொண்டு 7 மாதங்களாக காத்திருந்தார்.
வைரலான வீடியோவில் என்ன உள்ளது?
சர்வீஸ் சென்டரில் இருந்து ஸ்கூட்டரை வெளியே கொண்டு வந்த உரிமையாளர், அதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அங்கு இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும், சில நொடிகளில் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து விட்டது.
வாடிக்கையாளர் குற்றச்சாட்டு
ஷோரூம் மேலாளரை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும், எப்போதும் “நாளைக்கு வா” என்ற பதில்தான் கிடைத்ததாக அவர் குற்றம் சாட்டினார். தன்னுடைய ஸ்கூட்டர் மட்டுமல்லாமல், பல வாடிக்கையாளர்களின் வாகனங்களும் நீண்ட நாட்களாக சர்வீஸ் சென்டரில் அப்படியே கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிற வாகனங்களின் பாகங்களை எடுத்து வேறு வாடிக்கையாளர்களின் ஸ்கூட்டரில் பொருத்துவதாகவும் புகார் எழுப்பியுள்ளார்.
இது முதல் முறையா?
இது ஓலா எலக்ட்ரிக் மீது வாடிக்கையாளர்கள் கோபம் வெளியிட்ட முதல் சம்பவமல்ல. கடந்த காலத்திலும், சேவையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஒருவன் தனது புதிய ஓலா ஸ்கூட்டர் ஷோரூமுக்கு தீ வைத்த சம்பவம் வெளியாகியிருந்தது. மேலும், “மோசமான சேவை மற்றும் வாடிக்கையாளர் புகார்களை புறக்கணிக்கிறது” என்ற குற்றச்சாட்டுகள் பல முறை ஓலா நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது