இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிற்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டு உள்ளார்.

யார் இந்த சுதர்சன் ரெட்டி?

ஆந்திர மாநிலத்தின் ரெங்காரெட்டி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் சுதர்சன் ரெட்டி. 1946ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது 80 வயதை நெருங்குகிறார். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்துள்ளார்.

2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சுதர்சன் ரெட்டி. குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். கோவா மாநிலத்தின் முதல் லோக் ஆயுக்தா தலைவராகவும் சுதர்சன் ரெட்டி இருந்துள்ளார். 

சட்டம் அறிந்த, அரசியல் பின்புலம் இல்லாதவராக நபராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ’’ஒரு சிறந்த மனிதரை, சட்டம் தெரிந்த வேட்பாளரை அறிவித்துள்ளோம்’’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 

ஆம் ஆத்மியும் ஆதரவு

அதேபோல இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஆம் ஆத்மியும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதாக, அக்கட்சியின் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். 

சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (ஆக. 21) வேட்பு மனுத் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் யார்?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தங்களின் செல்வாக்கை உயர்த்தவும் கொங்கு மண்டலத்தைத் தங்கள் வசப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால், இவரே பெரும்பாலும் குடியரசு துணைத் தலைவர் ஆகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.