பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான டி20 தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு போட்டிகளாக தொடர் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக வெறும் 3.3 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டன. 


இதுமட்டுமின்றி, மிகப் பிரபலமான எம்.சின்னசாமி மைதானத்தில் கூரைகள் சேதமடைந்திருந்ததால் பார்வையாளர்கள் இருக்கைகளில் மழைநீர் கடுமையாக வழிந்தோடியது. கூரையில் இருந்து வழியும் மழை நீரின் வீடியோ ஒன்றப் பகிர்ந்த பார்வையாளர் ஒருவர், பிசிசிஐ, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் முதலானோரை டேக் செய்து ரசிகர்களின் நலனை எப்போது கருத்தில் கொள்ளப் போவதாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 


`போட்டியை விட மைதானத்தின் நிலைமை கடுமையான அதிருப்தியை ஏற்படுத்துகிறது.. உலகிலேயே அதிக பணம் மதிப்புகொண்ட கிரிக்கெட் வாரியம் எனக் கூறிக் கொண்டாலும், ரசிகர்கள் இந்த நிலையைத் தான் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது.. பிசிசிஐ, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் முதலானோர் எப்போது இந்த விளையாட்டின் நிலைமைக்கேற்ப ரசிகர்களின் அனுபவத்தை முன்னேற்றப் போகிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 



கிரிக்கெட் உலகில் அதிக பணம் மதிப்பு கொண்ட கிரிக்கெட் வாரியங்களுள் ஒன்றாக பிசிசிஐ இருந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தைச் சமீபத்தில் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது பிசிசிஐ. இந்த அமைப்பின் தலைவரான சௌரவ் கங்குலி சமீபத்தில் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மாநில வாரியிலான அசோசியேஷன்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கவும் திட்டமிட்டு வருவதாகக் கூறியிருந்தார். 






சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, `ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்த கூடுதலாகக் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுவோம். புதிதாகப் பல்வேறு மைதானங்கள் கட்டப்படும். இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கான கட்டமைப்பு பெரிது. பழைய மைதானங்களைப் புதுப்பித்து ஐபிஎல் போட்டிகளைக் கூடுதல் கொண்டாட்டங்களுடன் அடுத்த ஆண்டு தொடங்குவோம். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா தொற்றால் தடங்கல் ஏற்பட்டிருந்தாலும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் போட்டிகளையும் நடத்த முயன்றோம். இந்த முறை, கொல்கத்தாவிலும், அகமதாபாத்திலும் கூடுதல் கொண்டாட்டங்களுடன் போட்டிகள் முடிவடைந்தன. அடுத்த முறை இன்னும் முன்னேற்றங்கள் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.