இந்தியாவின் முக்கிய மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா ஆகும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மகாராஷ்ட்ராவின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள மாவட்டம் ரத்னகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது சிப்லுன் நகரம். இங்கு கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை அடிக்கடி பெய்து வரும் நிலையில், நேற்று வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் அரங்கேறியது.


சாலையில் ஊர்ந்த முதலை:


நேற்று இரவு இந்த சாலையில் வாகன ஓட்டிகள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிகப்பெரிய முதலை ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் வேகமாக அந்த இடத்தை கடந்து சென்றனர்.






8 அடி நீள முதலை:


சிலர் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த முதலையை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலைக்கு திடீரென வந்த இந்த முதலை ஷிவ் அல்லது வஷிஷ்சி நதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


சிப்லுன் நகரத்தின் சின்ஷ்நகா பகுதியில் 8 அடி நீளமுள்ள முதலை, சாலையில் சுற்றித்திரிந்த சம்பவம் அந்த மாவட்டம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முதலையின் தற்போதைய நிலை என்ன? அந்த முதலையால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா? என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


அந்த பகுதிகளில் வழக்கமாக பருவமழை காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்தாண்டு வதோரா அருகே விஸ்வாமித்ரா நதியில் இருந்து 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று வெளியே வந்து சாலையில் சுற்றித்திரிந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: "எழுதி வச்சுக்கோங்க.. குஜராத்தில் உங்களை தோற்கடிப்போம்" முறைத்த பிரதமர்.. ராகுல் காந்தி சவால்!


மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்திற்கு எதிராகவும் முழு மதுவிலக்கிற்கும் உறுதியாக இருக்கின்றோம் - திருமாவளவன்