மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெற உள்ளனர்.


மத்திய அமைச்சரவை ஒப்புதல்:


38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு 12 ஆயிரத்து 815 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது" என்றார்.


விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது மத்திய அரசு. சமீபத்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகியிருந்தாலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கும் சேர்த்து இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


7ஆவது மத்திய ஊதிய கமிஷன் குழுவின் பரிந்துரையின்படி முடிவு:


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7ஆவது மத்திய ஊதிய கமிஷன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையின்படி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


கடைசியாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கும் சேர்த்து அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருந்தது. அப்போது, அகவிலைப்படி உயர்வு 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 38 சதவிகிதமாக வழங்கப்பட்டது. பொதுவாக, ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். 


எரிவாயு சிலிண்டருக்கு மானியம் நீட்டிப்பு:


உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதனால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.


கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது.


இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்கள் நீட்டிக்கப்பட்டது.


இன்னும் இரண்டு மாதத்தில் கர்நாடகாவிலும் இந்தாண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதையும் படிக்க: MI-W vs UPW-W LIVE: 12 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டை இழந்த உபி வாரியர்ஸ்.. கேப்டன் ஹூலி 11 ரன்களில் காலி..!