இந்தாண்டு இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தாண்டு நடைபெறும் மாநில தேர்தல்கள் கருதப்படும்.
அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீதிமன்ற தீர்ப்பு:
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2019 தேர்தல் பரப்புரையின்போது மோடி குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சூரத் நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக அவரின் தண்டனைக்கு 30 நாள்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சூரத் நீதிமன்றம். ஆனால், குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எந்த விதி இடைக்கால தடையும் விதிக்கப்படவில்லை. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் நிவாரணம் வழங்காத பட்சத்தில் சிறைக்கு செல்ல நேரிடும்:
இதனால், அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி உயர் நீதிமன்றம் செல்லலாம். ஆனால், 30 நாள்களுக்குள் நீதிமன்றம் எந்த வித நிவாரணமும் வழங்கவில்லை என்றால், ராகுல்காந்தி சிறையில் அடைக்கப்படுவார்.
மக்கள் மத்தியில் ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைபயணம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் தேசிய அளவில் அவரின் செல்வாக்கு உயர்ந்திருப்பதால் அதை சீர்குலைக்கும் விதமாக தகுதி நீக்க நடவடிகக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் எல்லாம் சிறை தண்டனை விதிக்கப்படாது. ஆனால், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு:
இன்னும் இரண்டு மாதங்களில் கர்நாடகாவிலும் இந்தாண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை நடைபெறும் சமயத்தில், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விரிவாக பேசியுள்ள முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், "இரண்டு ஆண்டு சிறை தண்டனையால் அவரின் எம்பி பதவி தானாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அது போதாது. அவர் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்க வேண்டும். அப்படி, குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை வாங்கினால் மட்டுமே அவரால் எம்பியாக தொடர முடியும்" என்றார்.