DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெற உள்ளனர்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியானது தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் கணக்கிடப்படுகிறது. மத்திய தொழிலாளர் அமைச்கத்தின் கீழ்தான் தொழிலாளர் பணியகம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெற உள்ளனர். 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு 12 ஆயிரத்து 857 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது" என்றார்.
7ஆவது மத்திய ஊதிய கமிஷன் குழுவின் பரிந்துரையின்படி முடிவு:
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகவிலைப்படி உயர்வு மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7ஆவது மத்திய ஊதிய கமிஷன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையின்படி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மூலம் 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கு 7,560 ரூபாய் டிஏ தொகை 8,280 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்கள் சுமார் 720 ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. இதேபோல, 56,900 ரூபாய் சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக டிஏ-வில் ரூ.2,276 கிடைக்கும்.
தீபாவளி போனஸ்:
முன்னதாக நேற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மாத சம்பளத்துடன் ரூ.7,000 வரை போனஸ் அளிக்கப்படும் என்று தெரிகிறது.