இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வியாழன் காலையில் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.26 லட்சமாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி, 1.31 லட்சம் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இந்தியா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.45 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.




நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 45 ஆயிரத்து  384 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 926 நபர்களாக உயர்ந்துள்ளது.


இதுமட்டுமின்றி, நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்று இந்தியா முழுவதும் 794 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றும், உயிரிழப்பும் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.