77th Independence Day: நாட்டின் 77வது சுதந்திர தினக் கொண்டாட்ட விழா வெகு விமரிசையாக நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டுள்ளது.  அதேபோல் நாடு முழுவதும் மக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அண்டை நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார். 


செங்கோட்டையில் பட்டொளி வீசும் தேசியக் கொடி


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பை ஏற்கவிருக்கிறார். அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள், நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள், முப்படைத் தலைமை தளபதி, பாதுக்காப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் இந்த நாளில் மாநிலங்களின் சார்பில் சுதந்திர தின ஊர்திகளும் பொதுமக்கள் பார்வைக்கு  அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. 


 


செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றம்


தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், மாநிலத்தின் தலைநகராக உள்ள சென்னையில் அமைந்துள்ள மாநில சட்டப்பேரவையான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 77வது சுதந்திரத்தை முன்னிட்டு கொடியேற்றவுள்ளார். கொடியேற்றம் முடிந்த பின்னர், மத்திய, மாநில பாதுகாப்பு வீரர்கள் நடத்தவுள்ள சாகச நிகழ்ச்சிகளை பார்க்கவுள்ளார். மேலும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் முதலமைச்சருக்கு கொடுக்கப்படவுள்ள அணிவகுப்பு மரியாதையியும் ஏற்கவுள்ளார். இதன் பின்னர் மாநில அரசு சார்பில் அறிவிக்கப்படுள்ள தகைசால் விருது, காவல் துறையில் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 


தேநீர் விருந்து புறக்கணிப்பு 


77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுநல சேவையில் ஈடுபட்டுவரும் சமூக நல ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த தேநீர் விருந்தை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக நேற்று அறிவித்திருந்தார். நீட் தேர்வு ரத்து செய்வதற்கான கோப்பில் ஆளுநர் ஒருபோதும் கையெழுத்து போடமாட்டேன் என அறிவித்ததையடுத்து முதலமைச்சர் புறக்கணிப்பு முடிவை எடுத்தார். இந்த விருந்தில் திமுக கூட்டணிக் கட்சிகளும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். 


இதேபோல் மாவட்டத் தலைநகரகங்களில் மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சிகளில் மேயர்கள் என நாடு முழுவதும் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றவுள்ளனர்.