திருமணத்துக்கான உறுதி அளிக்கப்படாமல் இந்தியப் பெண்கள் ஓர் ஆணுடன் உடல் ரீதியான பந்தத்தில் ஈடுபடுவதில்லை என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற இந்தூர் கிளை தெரிவித்துள்ளது. திருமணம் செய்துகொள்வேன் என்று சத்தியவாக்கு அளிக்காமல் ஒருபோதும் அவர்கள் அத்தகைய உறவில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.


மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற இந்தூர் கிளைக்கு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இளம் பெண் ஒருவர், தன்னை காதலித்த நபர், திருமணம் செய்வதாகக் கூறி தன்னுடன் உறவு கொண்டுவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக அப்பெண் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி சுபோத் அப்யங்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியா ஒரு பழமைவாத சமூகம். இந்திய தேசம் இன்னும், திருமணத்துக்கு முன்னதாக பெண்கள் ஆண்களுடன் உறவு கொள்ளும் நிலைக்கு வரவில்லை. ஒருவேளை அந்த உறவு திருமணத்தில் முடியும் என்று ஆணிடமிருந்து வாக்குறுதி இருந்தால் மட்டுமே அத்தகைய உறவு ஒருசில இடங்களில் நிகழலாம்.


இந்த வழக்கில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை அந்த இளம் பெண்ணுடன் தொடர்ந்து உறவில் இருந்துள்ளார். திருமணம் செய்துகொள்வேன் என்ற போர்வையில் தான் அந்த நபர் இளம் பெண்ணை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். அந்த நபருக்கும் ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியின் ஏமாற்று வேலை உறுதியாகிறது. அவர் ஜாமீன் பெற தகுதியற்றவர். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் அந்த நபர் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாலேயே அவர் ஏமாற்றியவுடன் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இந்தியப் பெண்களுடன் திருமணத்துக்கு முன் உறவு வைக்க நினைக்கும் ஆண்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2018-ஆம் ஆண்டிலேயே சம்பந்தப்பட்ட பெண் 18 வயதைக் கடந்தவராக இருந்தார் என்றும் தனது வாதிக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையேயான உடல் ரீதியான உறவு ஒருமித்த சம்மதத்துடனேயே நடந்தது என்றும் வாதிட்டார்.


வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர், பாதிக்கப்பட்ட பெண் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர். இதனாலேயே இந்த வழக்கு கூடுதல் கவனம் பெற்றது. இருவரும் திருமணம் செய்யவிருந்ததாகவும் ஆனால், பெண்ணின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


திருமணத்துக்கு முந்தைய ஆண் பெண் உறவு குறித்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற இந்தூர் கிளையின் கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை உண்டாகியுள்ளது. சிலர் இதனை விமர்சித்தும், இன்னும் சிலர் நீதிமன்றத்தின் பார்வையை ஆமோதித்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.