வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, மத்திய அரசு க்ரிப்டோ கரன்சியைத் தடை செய்யவும், சட்டப்பூர்வமான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடுவதற்கான வழிமுறைகளை வெளியிடவும் உள்ளதாக மக்களவை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரிசர்வ் வங்கி சார்பில், இந்தியாவின் சட்டப்பூர்வமான டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதற்கான எளிமையான கட்டமைப்பை உருவாக்கும் வழிமுறைகள் வெளியிடப்படவுள்ளன. மேலும், இந்த சட்ட மசோதா மூலமாக, இந்தியாவில் அனைத்து தனியார் க்ரிப்டோ கரன்சிகளைத் தடை செய்யப்பட உள்ளது. எனினும், க்ரிப்டோ கரன்சி தொழில்நுட்பத்தின் பயன்களைப் பயன்படுத்துவதற்காக சில விதிவிலக்குகளும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. 


கடந்த ஜூலை மாதம், ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. இது மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (Central Bank Digital Currency) என்று அழைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 


 


மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி என்பது நாம் பயன்படுத்தும் பணத்தின் மெய்நிகர் வடிவம். ஒரு நாட்டின் மத்திய வங்கியால் வெளியிடப்படும் சட்டப்பூர்வமான பணமாகவும் இது கருதப்படும். இது நாட்டின் மத்திய வங்கியால் வெளியிடப்பட்டு, முறைப்படுத்தப்படும். மேலும் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி என்பது வங்கித் துறையால் பயன்படுத்தப்படக் கூடியதாகவும், நிலவும் கட்டமைப்புகளில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். 


மேலும், வருமான வரி சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து, க்ரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் லாபத்தையும் வருமான வரிக்குள் கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு எடுத்து வருவதோடு, அடுத்த ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சில மாதங்களுக்கு முன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் க்ரிப்டோ கரன்சி குறித்து எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தார். மேலும் டிஜிட்டல் கரன்சியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன், அது குறித்து விவாதங்கள், கலந்துரையாடல்கள் தேவை என்றும் அவர் கூறியிருந்தார். எனவே க்ரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வமாக்குவது குறித்த கட்டமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் தற்போது முன்வந்துள்ளது. 


 


இதுகுறித்து பேசியுள்ள க்ரிப்டோ கரன்சி நிறுவனம் ஒன்றின் மூத்த நிறுவனர், இந்தியாவில் க்ரிப்டோ கரன்சி மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், முற்றிலுமாகத் தடை செய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் க்ரிப்டோ கரன்சி முழுமையாகத் தடை செய்யப்படாது எனச் சமீபத்தில் கூறியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், நிதி குறித்த பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், `நான் ஏற்கனவே நாம் க்ரிப்டோ கரன்சியை முழுமையாகத் தடை செய்யப் போவதில்லை என்று கூறியிருந்தேன். எனினும் இந்தத் தொழில்நுட்பம் நம் நிதியை மேம்படுத்த எவ்வாறு உதவும் என்பதைப் பார்க்க வேண்டும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.