புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ நேற்று (ஜூன் 7 ஆம் தேதி) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் சோதனை செய்யப்பட்டது.  






நம் நாட்டின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அக்னி ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டது. அக்னி ஏவுகணையில் பல வகைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியா கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்தது. இது 1,200 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியது. அக்னி பிரைம்  - 2,000 கி.மீ.  தொலைவு வரை செல்லும் , அக்னி 2 - 3,500 கி.மீ., அக்னி 3 - 3,000 முதல் 5,000 கி.மீ., அக்னி 4 (4,000 கி.மீ., அக்னி 5 8,000 கி.மீ. தொலைவு  என அடுத்தடுத்து அக்னி வகை ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.


இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது. அக்னி ஏவுகணை இந்திய ரணுவத்தில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்திய ராணுவத்தில் இந்த அக்னி ஏவுகணைகள் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.  ஏவுகணையின் மூன்று வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட முதல் pre induction சோதனை இதுவாகும். ரேடார், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்ஸ் போன்றவை வெவ்வேறு இடத்திலிருந்து சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த ஏவுகணை எவ்வாறு தரவுகளை சேகரிக்கும் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதிகாரிகள் சோதனையின் போது உடனிருந்தனர். புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை அக்னி பிரைமின் வெற்றிகரமான சோதனைக்காக, டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளுக்கு  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.இதற்கு முன், ஜூன் 2 ஆம் தேதி அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பிலும், அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் பல்வேறு வகையான அக்னி ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.