காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில், பல தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. 


எதிர்கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், எழுத்தாளரும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.


குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி:


தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்து இறுதியில் காஷ்மீரில் நிறைவடைந்தது. 


நடுவில் இடைவெளியுடன் மொத்தம் 146 நாட்களுக்கு நடந்த இந்திய ஒற்றுமை பயணம் கடந்தாண்டு ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஒற்றுமை பயணத்தால் மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


இந்த நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்றொரு நடைபயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில், கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


அதன்படி, வரும் 14ஆம் தேதி மணிப்பூரில் யாத்திரையை தொடங்க உள்ளார் ராகுல் காந்தி. மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்ளவார் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த யாத்திரைக்கு பாரத் நியாய யாத்ரா ( இந்திய நீதி பயணம்) என பெயரிடப்பட்டது.


பாரத் ஜோடோ நியாய யாத்திரை:


இந்த நிலையில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள யாத்திரையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பாரத் நியாய யாத்திரை என்பதற்கு பதில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என அழைக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை குழு தலைவர்கள் கூட்டத்தில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்பது பிராண்டாக மாறி, மக்கள் மனதில் பதிந்துவிட்டதாகவும் கூறினர். அதை நாம் இழக்க கூடாது என்றனர்.


எனவே, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என இனி அழைக்கப்படும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பாரத் ஜோடோ நியாய யாத்திரை தொடங்குகிறது. 66 நாட்களுக்கு 6,700 கிமீ தூரம் பயணம் செய்ய உள்ளார் ராகுல் காந்தி.


இன்று நடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் அடிப்படையில் யாத்திரைக்கான பாதையை இறுதி செய்தோம். நாங்கள் எப்போதும் அருணாச்சலப் பிரதேசத்தை மனதில் வைத்திருந்தோம். எனவே, பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் அருணாச்சலப் பிரதேசமும் உள்ளடங்கும்" என்றார்.