பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகள் வளர்க்கப்பட்டால் அவற்றுடன் வீட்டிலிருக்கும் சிறு பிள்ளைகள் மிகவும் பாசமாக இருப்பார்கள். அந்த பிராணிகளுக்கு ஏதேனும் காயம் அல்லது உடல்நல குறைவு ஏற்பட்டால் அவர்கள் மிகவும் சிறப்பான அரவணைப்புடன் பார்த்து கொள்வார்கள். அப்படி ஒரு சிறுவன் தன் வீட்டில் வளர்த்து வந்த செல்ல பிராணியை இறைச்சி கடைக்கு எடுத்து செல்லும் போது கண்ணீர் விட்டு முறையிட்டு தடுக்க முயன்றுள்ளார். யார் அவர்?


சிக்கிம் மாநிலத்தின் தெற்கு சிக்கிம் மாவட்டத்தின் மெள்ளி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் தன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழி குஞ்சுகளுடன் அதிக பாசத்துடன் பழகி வந்துள்ளார். அந்த கோழி குஞ்சுகள் பெரிதான உடன் அவற்றை அந்த குடும்பத்தினர் இறைச்சி கடைகளுக்கு விற்று வருமானம் ஈட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் அவர்கள் வீட்டில் இருந்த கோழிகளை விற்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக ஒரு கடைக்கு விற்க முற்பட்டுள்ளனர். 




அப்போது அவர்கள் ஒரு சிறிய வேனில் கோழிகளை பிடித்து ஏற்றியுள்ளனர். இதை பார்த்த அந்த சிறுவன் தான் ஆசையாக வளர்த்த கோழிகள் இறைச்சி கடைக்கு செல்ல உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அத்துடன் அவர் அக்கடைக்காரர்களிடம் அழுது முறையிட்டு அந்த கோழிகளை விடுமாறு கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை வாயிஸ் ஆஃப் சிக்கிம் என்ற அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ கடந்த 27ஆம் தேதி முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. 



அதில், “இந்தச் சிறுவன் அந்த வேனை நோக்கி தன்னுடைய கோழிகளை விடுமாறு கோரிக்கை வைக்கிறார். அதை அவர்கள் கேட்காமல் கோழிகளை ஏற்றும் போது ரோட்டில் அமர்ந்து அழுகிறார்” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இச்சிறுவனை அவருடைய தந்தை இன்னும் அதிகமாக கோழி குஞ்சுகள் வாங்கி தருவதாக கூறி சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. 


இந்த வீடியோ ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்போது வரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலரும் அச்சிறுவனின் அன்பை பாராட்டி வருகின்றனர். தான் வளர்த்த கோழிக்காக சாலையில் அமர்ந்து அழும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தாய் உள்ளம் கொண்ட இந்த சிறுவனின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இது ஒரு உண்மையான அன்பின் வெளிப்பாடு என்று பலரும் கருதும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 'ஆத்தாடி இவ்ளோ விலையா'- டாப் 11 ஆடம்பர இந்திய பங்களாக்கள் ! ஓனர் யார் சார்?