நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர்.


இதுவரை, இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது இந்தியாவிற்கு தன்னுடைய தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது கடினம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இதனால் தன்னுடைய தடுப்பூசிகளை பயோலாஜிகல் ஈ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் தயாரிப்பதாக ஜான்சன் நிறுவனம் தெரிவித்தது. 






இதனைத் தொடர்ந்து பயோலாஜிகல் ஈ நிறுவனம் தயாரிக்கும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்திருந்தது. ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு ஆய்வக பரிசோதனை தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.


மேலும், மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாடர்னா தடுப்பூசியை சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.






இதன் மூலம், இந்தியா தனது தடுப்பூசிகள் பட்டியலில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக்கை அடுத்து நான்காவதாக மாடர்னாவைச் சேர்த்துள்ளது.