இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை முதல் நாள் ஏலம் நேற்று நிறைவுற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள நிலையில், 5-வது சுற்று ஏலம் இன்று நடைபெறுகிறது.


5ஜி சேவை என்றால் என்ன?


நான்காம் தலைமுறை இணையசேவையின் அடுத்த விரிவாக்கம் தான் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் எனப்படுவது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே 5ஜி சேவையை வழங்க தொடங்கி விட்டன. 4G அலைக்கற்றையை விட 5G அலைக்கற்றையின் வேகம் 10 மடங்கு அதிகம் என்று கூறுகிறார்கள், நம் மக்கள் இன்னும் வேகமாக இயங்கப்போகிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. 5G சேவையினால் தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 



5ஜி அலைக்கற்றை ஏலம் 


இந்தியாவில் 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான ஏலம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பிரிவுகளாக 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 5ஜி உரிமையை பெரும் நிறுவனம், 20 ஆண்டுகளுக்கு அந்த சேவை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பங்கேற்கும் நான்கு நிறுவனங்களில், அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்தியுள்ளது. இந்தாண்டின் இறுதியில், சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில், 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: வாட்ச் திருடியதாக மாணவனை அடித்துக் கொலை செய்த ஆசிரியர்கள்.. அதிர்ந்த கிராமம்.. தீவிர விசாரணை..


5ஜி தொழில்நுட்பம் சாதகங்கள்


5ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புகள் மூலம் பயனர்களால் அனுப்பப்படும் தரவுகள் அதிவேகத்தில் சென்றடையும். 5ஜி தொழில் நுட்பத்தின் நேர தாமதம் 1 மில்லிவினாடிக்கு குறைவாக இருக்கும். இதன்மூலம், தாமதமாவது தவிர்க்கப்பட்டு பயனர்களின் நேர விரையம் குறைக்கப்படும்.


5ஜி சேவையால் ஒரு வினாடிக்கு 2ஜிபி தரவுகள் வரை பதிவிறக்கம் செய்ய முடியும். ஒரே நேரத்தில் பல தரவுகளை பதிவேற்றவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும். 'beam forming' எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 5G சேவையில் பலவீனமான சிக்னல், நெட்வொர்க் குறைபாடு போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது.


வயர்லெஸ் இணைப்புகள் மூலம் செயல்படும் BLUETOOTH உள்ளிட்ட கருவிகளை அதிக வேகமாக செயல்பட வைக்க 5G சேவை உதவும். உயர்தர 4k வீடியோக்களை தங்குதடை இல்லாமல் பிளே செய்ய முடியும். இதன்மூலமாக மிகவும் துல்லியமாக ஒருவரது இருப்பிடத்தை கண்காணிக்கலாம்.



5ஜி சேவை பாதகங்கள்


அதிர்வெண் அலைகள் குறைந்த தூரம் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், 5G சேவையை அதிக தூரத்திற்கு வழங்குவது சவாலானதாக இருக்கும். ஒரு செல்போன் கோபுரத்தால், குறைவான தூரம் வரை உள்ள செல்போன் களுக்கு மட்டுமே சேவையை அளிக்க முடியும் என்கிற நிலை வரலாம்.


அப்படி ஆனால் 5G சேவையை வழங்குவதற்கு அதிக அளவிலான செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்படும். செல்போன் கோபுரங்கள் தூரமாக இருப்பதாலும், அதிலிருந்து நெட்ஒர்க்கை இழுப்பதற்கு அதிக சக்தி தேவைப்படுவதாலும், 5G சேவையை பயன்படுத்தும்போது செல்போன்களில் உள்ள பேட்டரிகள் சீக்கிரம் ட்ரெயின் ஆகி விடும் என்று யூகிக்கப் படுகிறது. பதிவிறக்க வேகம் அதிகமாக இருந்தாலும், பதிவேற்ற வேகம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி


இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இன்றுடன் ஏலம் நிறைவடையும் எனவும், அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீடு நிறைவடையும் எனவும் அவர் கூறி உள்ளார். வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் 5ஜி அலைக்கற்றை சேவைகள் தொடங்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.