தமிழகத்தில் 2 வாரங்களில் 2 பெண் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க உத்தரபிரதேசத்தில் மாணவன் ஒருவர் வாட்ச் திருடியதாகக் கூறி ஆசிரியர்கள் அடிக்க அதில் படுகாயமடைந்து மாணவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்தது என்ன?
உத்தரபிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் உள்ளது மாடயா கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் சேரவந்த தில்ஷன் என்ற ராஜாவுக்கு தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்ட தந்தையின் புகார் மனுவில், "தில்ஷனின் சொந்த ஊர் பாஷ்சிம் மாடாய கிராமத்தில் உள்ள கசாவா சவுகி என்ற ஊர். இவர் ஆர் எஸ் இன்டர் கல்லூரியில் 9ஆம் வகுப்பில் சேர சென்றிருந்தார். ஜூலை 23 ஆம் தேதி அவர் அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு அவர் ஒரு கைக்கடிகாரத்தை திருடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உடனே விசாரணை என்ற பெயரில் சிவ்குமார் யாதவ் என்ற ஆசிரியர் தில்ஷனை அடித்துள்ளார். பின்னர் சிவ்குமாருடன் பிரபாகர், விவேக் ஆகியோரும் இணைந்து கொண்டனர். இதில் தில்ஷன் காயமடைந்தார். உடனே அதிர்ந்து போன ஆசிரியர்கள் தில்ஷனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி அவரை கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதனால், தில்ஷனை கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தில்ஷன் இறந்து விட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே மரணத்துக்கான காரணம் ஆசிரியர்கள் தாக்கியது தானா என்பது தெரியவரும் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக ஊர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்கள் சிவ்குமார் யாதவ், பிரபாகர், விவேக் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று ஊர்மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
நம் நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 350க்கும் மேற்பட்ட குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கருக்கலைப்பு தொடங்கி பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர் முறை என பல்வேறு குற்றங்களும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகின்றன. வீட்டில் பெற்றோர் குழந்தைகளை படி, படி என்று துன்புறுத்துவதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்றே பட்டியலிடப்படுகிறது.
கிராமத்தில் இருந்து கல்விக் கனவோடு வந்த சிறுவன் வன்முறையால் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.