கர்நாடகாவின் மைசூரில் எம்.பி.ஏ. மாணவி ஒருவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். 



மைசூரு நகரில் எம்.பி.ஏ. மாணவி ஒருவர் கடந்த 24ந் தேதி இரவு மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். தனது ஆண் நண்பருடன் சென்றுகொண்டிருந்த அவரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கி பாலியல் வன்முறையில் ஈடுபட்டது. உடன் சென்ற ஆண் நன்பரையும் அந்த கும்பல் தாக்கியது. தாக்கப்பட்ட இருவரும் தற்போது மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் குற்றத்தைச் செய்தவர்களை தண்டிக்கும்படி மாநிலம் முழுவதும் அங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. 




போராட்டத்தின் வீரியம் அதிகமடையத் தொடங்கியதை அடுத்து  குற்றவாளிகளைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். 


மேலும் மாணவியின் ஆண் நண்பர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். அதில்,’நடை பயிற்சிக்காக மாலையில் மலையடிவாரத்துக்கு அந்தப் பெண்ணுடன் சென்றேன். அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பல் கற்கள் உருட்டுக் கட்டைகளால் என்னைத் தாக்கினர். மாணவியையும் தாக்கி ஒருவர் பின் மற்றொருவராக கொடூரமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.குரூரமாக இதனை மொபைல் ஃபோனில் வீடியோ பதிவும் செய்தனர். பிறகு எனது தந்தைக்கு போன் செய்து ஆன்லைன் வழியாக மூன்று லட்ச ரூபாய் அனுப்பும்படியும் தந்தை ஒப்புக்கொள்ளாததால் என்னை மேலதிகமாகத் தாக்கினர். நாங்கள் மயக்கமடைந்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்’ எனக் கூறினார். 


குற்றம் நடந்த பகுதியின் மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்தி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் விபரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் நான்கு பேர் பொறியியல் மாணவர்களாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகித்தது. மொபைல் நெட்வொர்க் தகவல்படி சம்பவம் நடந்த மறுநாள் மாணவர்களுக்கு தேர்வு இருந்துள்ளது. ஆனால் அவர்கள் யாரும் தேர்வு எழுதச் செல்லவில்லை. மாணவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் கிடைத்ததை அடுத்து கர்நாடக போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு கிடைத்த தகவலின்படி திருப்பூர் விரைந்த போலீசார் அங்கே 6 பேரையும் கைது செய்துள்ளனர். 


இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள கர்நாடக டிஜிபி ப்ரவீன் சூட், முழுக்க முழுக்க அறிவியல் ஆதாரங்களை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் 17 வயதுக்கு உட்பட்டவர் என்றும் ஒருவர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் தற்செயலாக அந்த இடத்தில் இருந்துள்ளார்கள். இதுதிட்டமிட்டு நிகழ்ந்தது அல்ல.தற்போதுதான் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளார்கள். குற்றத்தை நிரூபிக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது எனத் தெரிவித்தார்.