கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தில் மாலை 6:30 மணிக்கு மேல் மாணவிகள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.


கடந்த 24-ம் தேதி மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்த மாணவி சாமுண்டி மலை அருகே 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மாணவியின் நண்பர் கடுமையாக தாக்கப்பட்டார். மக்கள் அதிகம் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்கும் சாமுண்டி மலைப்பகுதியில் மாலை நேரத்தில் நடந்த இச்சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் இயக்கங்கள், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் தான், மாணவிகள் பாதுகாப்பு எனக்கூறி பல்கலைக்கழக பதிவாளர் நேரக்கட்டுப்பாட்டை விதித்து உள்ளார். பல்கலைக்கழக வளாகத்துக்கு உட்பட்ட குக்கராஹல்லி ஏரி அருகே மாலை 6:30 மணிக்கு மேல் மாணவிகளுக்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்து உள்ளார். மாணவிகள் நடமாட்டத்தை தடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடுமாறு அவர் உத்தவிட்டு உள்ளார்.


அதுபோல், மானசா கங்கோத்ரி வளாகத்தில் மாலை 6:30 மணிக்கு மேல் மாணவிகள் தனியாக அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்திலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பணி அமர்த்த வேண்டும் என பல்கலைக்கழக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த கட்டுப்பாடு மாணவர்களுக்கு விதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர், “பல்கலைக்கழக வளாகத்தில் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து காவல்துறை கவலை தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் யாவும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டு உள்ளது.” என்றார்.


குக்கராஹல்லி ஏரிப்பகுதி என்பது ஏராளமான மரங்கள், செடிகள் நிறைந்த அடர்த்தியான வனப்பகுதி போன்று காட்சி தரும் என்பதால் அங்கு மாணவிகள் பாதுகாப்பு கருதி அவர்கள் செல்வதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.


மாணவிகள் எங்கு சென்றாலும் தனியாக செல்லாமல் நண்பர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையே தாங்கள் தெரிவிக்க விரும்பியதாகவும், பதிவாளர் பயன்படுத்திய சில வார்த்தைகள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.