புதிதாகத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தைத் தொடங்க 5 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. யுஜிசி 40 முதல் 60 ஏக்கர் நிலம் தேவை என்ற விதிமுறை இருந்த நிலையில், விதிமுறைகளை யுஜிசி தளர்த்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கலை, அறிவியல் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்வகித்து வருகிறது. பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நிர்வகித்து வருகிறது.
இந்த நிலையில், புதிதாகத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொடங்க 5 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வெளியான கெஜட் அறிவிப்பின்படி (திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கான நிதி ஆதாரம்) பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் 1989, தற்போது (திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கான நிதி ஆதாரம்) பல்கலைக்கழக மானியக் குழுவின் திருத்தப்பட்ட விதிமுறைகள் 2022ஆக இனி அழைக்கப்படும்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார், "எல்லா இடங்களிலும் கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான நிலம் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால் தொலைதூர மற்றும் ஆன்லைன் வழிக் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது. அத்தகைய கல்வி நிறுவனங்களின் சேவையைப் பெறும் வகையில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு 40 முதல் 60 ஏக்கர் நிலங்கள் குறைந்தபட்சமாகத் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நகர்ப் புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இவ்வளவு நிலங்களைப் பெறுவதில் மிகவும் சிரமம் இருந்தது. அதனால், இந்த நில அளவு 5 ஏக்கர் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
இவை தொலைதூர மற்றும் ஆன்லைன் வழிக் கல்வி நிறுவனங்கள் என்பதால், மாணவர்கள் யாரும் முழு நேரம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருப்பதில்லை. அதனால், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகளைக் குறைத்துக்கொள்ளலாம் என்று யுஜிசி நினைத்தது. இதன்மூலம் ஏராளமான புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு, இன்னும் அதிக மாணவர்களுக்குக் கல்வி அளிக்க முடியும்" என்று ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளின்படி யுஜிசி அடிப்படை உள்கட்டமைப்பு நெறிமுறைகள் குறித்துத் திருப்தி அடையாத வரையில், மத்திய அரசு, பிற ஆணையங்களிடம் இருந்து மானியங்களைப் பெறுவதற்குத் தகுதியானதாக திறந்த பல்கலைக்கழகத்தை அறிவிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்