புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போது, நாட்டின் பொருளார நிலை குறித்து விவாதம் நடந்து வருகிறது.


"வளர்ச்சி காணும் உற்பத்தித்துறை"


விவாதத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேதிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. பிற நாட்டின் பொருளாதாரம் சுருங்கும்போது (குறையும்) கூட நமது பொருளாதாரம்  விரிவடைகிறது. நாட்டின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி, 7.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. உலகிலேயே அதிக வளர்ச்சி பதிவான நாடாக உள்ளது.


ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவானது. ஒப்பிட்டளவில், வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறியீடு சுருங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சி சுருக்கம் கண்டுள்ளது. நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.


மூன்றாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதார நாடுகளிள் வளர்ச்சியும் (ஜப்பான் மற்றும் ஜெர்மனியும்) சுருங்கியது. (மேலும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களும் சுருங்கின. ஒப்பிட்டளவில், இந்தியா, 7 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டது. அனைத்து துறைகளும் கணிசமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, உற்பத்தித்துறை வளர்ந்து வருகிறது.


"அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் காணப்படும் மேக் இன் இந்தியா தயாரிப்புகள்"


மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால், உற்பத்தித் துறையும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. உற்பத்தித் துறை பொருளாதாரத்தில் 13.9 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. உலகில் அதிகம் விரும்பப்படும் உற்பத்தித் தளங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எங்கள் ஏற்றுமதியும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில், மேக் இன் இந்தியா தயாரிப்புகள் அலமாரிகளில் காணப்படுகின்றன.


இந்த ஆண்டு நேரடி வரி வசூல் 21.82 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி" என்றார்.


விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், "உலகிலேயே இந்தியா மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது என்றால், அந்த வளர்ச்சியின் தாக்கம் ஏன் களத்தில் தெரியவில்லை. நாம் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு. நாம் உலகில் மிக வேகமான விகிதத்தில் வளர்ந்து வருகிறோம். நாங்கள் புதுமையாக இருக்கிறோம், நாட்டிற்கு அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடு வருகிறது. ஆனால், அது ஏன் களத்தில் தெரியவில்லை? பணவீக்கத்தில் ஏன் இது காணப்படவில்லை? பணவீக்கம் மற்றும் வேலையின்மை தரவுகளில் ஏன் வளர்ச்சி காணப்படவில்லை" என்றார்.