விவசாய நிலத்தில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய செம்பிலானாலான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய நிலத்தில் ஆயுதங்கள்:
உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்புரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது, வயலில் இருந்து செம்புவில் செய்யப்பட்ட கத்தி, வேல் உள்ளிட்ட ஆயுதங்கள் அதிகம் கிடைத்தன. இவைகள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கூறப்படுகின்றன. தன் விவசாய நிலத்தில் இந்த பொருள்கள் கிடைக்கவே, இவைகளை தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன புதையல் என்று நினைத்த விவசாயி தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை மறைத்து வைத்துவிட்டார். பின்னர் இது குறித்த விஷயம் காவல்துறையினருக்குத் தெரியவரவே உடனடியாகச் சென்று அவைகளை கைப்பற்றிய அவர்கள் இந்திய தொல்லியல் துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.
4000 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள்:
விரைந்து வந்த அவர்கள் அந்த பொருள்களை ஆய்வு செய்ததில் அது 4000 ஆண்டுகளுக்கு முந்தைய செம்பு காலத்தைச் சேர்ந்தவை என்று கணித்துள்ளனர். இந்த செம்புப் பொருள்கள் கல்கோலிதிக் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் காவி நிற மட்பாண்டங்கள் இருப்பது இந்த காலத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிகப்படியான ஆயுதங்கள் ஓரிடத்தில் குவிந்திருக்க காரணம் என்ன? அவைகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவா? அல்லது இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டனவா? என்பது பற்றி தெரிய வேண்டியது இருக்கிறது என்று தொல்லியல் துறையின் இயக்குநர் புவன் விக்ரம் தெரிவித்துள்ளார்.
கிமு 2000 ஆண்டு காலம் பழமையானது:
இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரிய அளவிலான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக அல்லது நிலத்திற்காக சண்டையிட்டிருப்பதைக் காட்டுகிறது என்றும் சாதாரண மனிதர்களால் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது என்று தொல்லியல் துறையைச் சேர்ந்த ராஜ் குமார் கூறியுள்ளார். இந்த ஆயுதக் கலாச்சரமானது கி.மு 1500 அல்லது 2000 ஆண்டுகாலத்தையது என்று கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் அதே காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொருள்கள் அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்ற முடிவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் கண்டுபிடிப்பு:
அண்மையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில் இரும்பின் பயன்பாடு 4000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதற்கானச் சான்று கிடைத்தது. இரும்பு கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் பெருங்கற்படைச் சின்னங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.