பள்ளியின் தாளாளர் உட்பட 15 ஆசிரியர்கள் தங்களிடம் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 5 பெண் ஆசிரியர்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மீதும் வெவ்வேறு பிரிவுகளில் மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள். 5 பெண் ஆசிரியர்கள் உதவியுடன் இவர்கள் தங்களை கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாக அந்த மாணவிகள் புகார் அளித்துள்ளனர்’ என ராஜஸ்தான் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்களைப் பழிவாங்க முன்னாள் ஆசிரியர்கள் திட்டமிட்டு இதனைச் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பதாக ஆய்வாளர் மந்தன் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தொடர்ச்சியாக ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது.மிக அண்மையில்தான் அங்கே 10 மாதக் குழந்தைக்கு நடந்த திருமணத்தை செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.ராஜஸ்தான், தன்தனியா கிராமத்தைச் சேர்ந்தவர், 18 வயதான மைனா. 2001-ஆம் ஆண்டில் இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது, இவருக்கும் உதய்சர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது 18 வயதான மைனா, தனது குழந்தை திருமணத்தை ரத்துசெய்ய உதவுமாறு க்ருத்தி பார்தி என்ற சமூக ஆர்வலரிடம் உதவி கோரினார்.
இதையடுத்து, க்ருத்தி பார்தி கடந்த பிப்ரவரி மாதம் ஜோத்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் இந்த திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதையறிந்த மைனாவின் மாமியார் இந்த வழக்கைத் திரும்பப்பெறுமாறு மைனாவையும், அவரது குடும்பத்தையும் மிரட்டியுள்ளார். ஆனாலும், மைனா இந்த வழக்கை நடத்துவதில் உறுதியாக இருந்தார்.இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பிரதீப்குமார் ஜெயின் இந்த திருமணம் செல்லாது என்றும், இதனால் இந்த திருமணத்தை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார். மேலும், மைனா குழந்தையாக இருந்தபோது அவரை திருமணம் செய்த அந்த நபருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பின்னர், அவரும் திருமணம் செல்லாது என்ற உத்தரவுக்கு ஒப்புக்கொண்டார். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மைனா கூறும்போது, ”இந்த திருமணம் என்னை பாழாக்கிவிட்டது. இந்த குழந்தை திருமணத்தை ரத்து செய்ததன் மூலம், எனக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. இனி நான் படிக்கப்போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்