மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


துணி எடுக்கும்போது மின்சார தாக்குதல்:


தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் காலனி உள்ளது. அங்கு அகமது மற்றும் பர்வீன் தம்பதியினர் மற்றும் இவர்களது மகன்கள் அத்னான் மற்றும் மஹீம் ஆகிய 4 பேரும் வசித்து வந்தனர். துவைத்த துணியை குடிசைவீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் காயவைத்துள்ளார். மின்சார கசிவு ஏற்பட்டு இந்த கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது. இதனை அறியாத பர்வீன் காய வைத்த துணியை எடுக்கச் சென்றிருக்கிறார். துணிகளை எடுத்த போது கம்பியின் மீது கை பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.


4 பேர் உயிரிழந்த பரிதாபம்:


இதனால் அலறித் துடித்த பர்வீனை அவரது கணவர் அகமது பிடித்து இழுத்துள்ளார். ஆனால், அகமதுவும் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானார். இருவரும் அலறித்துடிப்பதைப் பார்த்த இரண்டு மகன்களும் பெற்றோர்களை ஓடி வந்து கட்டிப்பிடித்துள்ளனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய 4 பேரும் மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.




இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மின்சாரம் பாய்ந்தால் என்ன செய்ய வேண்டும்?


ஒருவர் மீது மின்சாரம் பாய்கிறது என்று தெரிந்தவுடனேயே மின்னோட்டத்தை முதலில் நிறுவ வேண்டும். பிறகுதான் மின் தொடர்பில் இருப்பவரை அப்புறப்படுத்த வேண்டும். அவசரப்பட்டு மின்சாரம் பாயும்போது பிடித்தால் காப்பாற்றச் செல்பவர் மீதும் மின்சாரம் பாயும். அல்லது தடித்த நீண்ட உலர்ந்த மரக்கட்டையால் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் நபரை மின் தொடர்பில் இருந்து அகற்ற வேண்டும். காலில் ரப்பர் செருப்போ அல்லது ரப்பர் பாய், மரப்பலகை போன்றவற்றில் நின்றுகொள்வது நல்லது. மின்சாரம் பாயாத அட்டை போன்றவற்றைக் கொண்டும் பாதிக்கப்பட்டவரை அகற்றலாம். காப்பாற்றச் செல்பவருக்கு தரை மற்றும் சுவருடன் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக காப்பாற்றச் செல்பவர் மீது ஈரம் இருக்கக் கூடாது. கையில் கிடைக்கிறது என்று உலோகம் மற்றும் முலாம் பூசப்பட்ட பொருள்களை பயன்படுத்தக் கூடாது.


உணர்ச்சிவயப்பட்டு பதற்றத்தில் முன் யோசனை இல்லாமல் காப்பாற்றச் சென்றால், காப்பாற்றச் செல்பவரும் உயிரிழக்கவோ அல்லது தீவிரமான காயங்களோ அடையக் கூடும். 


கட்டிப்பிடித்தபடியே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருப்பது தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.