காஷ்மீர் விவகாரத்தில் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், ஐநா உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.


காஷ்மீர் விவகாரம்:


நிலைமை இப்படியிருக்க, காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது அதற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக இரண்டாவது முறையாக அமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதன்மூலம், ஜம்மு காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியது. 


இதை தொடர்ந்து, இரு நாட்டு எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து அட்டூழியத்தில் ஈடுபடுதவாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, பஞ்சாப்புக்கு உள்ளே ட்ரோன் மூலம் போதை பொருளை கடத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.


அதன் தொடர்ச்சியாக, கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் நான்கு வெவ்வேறு இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த நான்கு ட்ரோன்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்து, சுட்டு வீழ்த்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு மூன்று ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்த நிலையில், நான்காவது ஆளில்லா விமானம் சனிக்கிழமை இரவு சுட்டு வீழ்த்தப்பட்டது.


24 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட நான்கு ட்ரோன்கள்:


இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "டிஜேஐ மெட்ரிஸ் 300 ஆர்டிகே தயாரிப்பின் கறுப்பு குவாட்காப்டரான முதல் ட்ரோன், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உதர் தரிவால் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் ட்ரோனை இடைமறித்த வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.


அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ரத்தன் குர்த் கிராமத்தில் இரவு 9.30 மணியளவில், இரண்டாவது ட்ரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ரத்தன் குர்த் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானத்தில் இருந்து 2.6 கிலோ ஹெராயினை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.


வெள்ளிக்கிழமை இரவு மூன்றாவது ஆளில்லா விமானம் இடைமறிக்கப்பட்டது. ஆனால், அது, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் விழுந்ததால் அதை மீட்க முடியவில்லை. நான்காவது ஆளில்லா விமானம் சனிக்கிழமை இரவு இந்திய வான்வெளி விதிகளை மீறி அமிர்தசரஸ் செக்டார் எல்லையில் பறந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் அதுவும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்தும், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது" என்றார்.