மகாராஷ்டிராவில் திருடியதாக சந்தேகப்பட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வைரலான வீடியோ:


மகாராஷ்டிரா மாநிலம் அகமதபாத் அடுத்து உள்ள ஹரேகான் எனும் ஒரு சிறிய கிராமத்தில் எடுக்கப்பட்டதாக, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கோழி மற்றும் ஆடு திருடியதாக இளைஞர் ஒருவரை பிடித்து, மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டுள்ளனர். அதோடு, 6 பேர் கொண்ட கும்பல் அந்த நபரை சூழ்ந்து கையில் குச்சியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன. அங்கு கடையடப்பு போராட்டங்களும் நடைபெற்றன.


திடுக்கிடும் தகவல்:


இதனிடையே, காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபரை தேடி வந்த நிலையில், அவரே காவல்நிலையம் வந்து சம்பவம் தொடர்பாக புகாரளித்துள்ளார். அதில், ”அந்த கும்பல் என் கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தியது. என்னுடன் சேர்த்து மேலும் 3 சிறுவர்களும் அவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான். அவர்கள் எங்கள்மீது சிறுநீர் கழித்தனர். இன்னும் பல கேவலமான செயல்களை எங்களை செய்ய வைத்தனர். நாங்கள் 4 பேரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை தாக்கியது யுவராஜ் கலண்டே, மனோஜ் போடகே, பப்பு பார்கே, தீபக் கெய்க்வாட், துர்கேஷ் வைத்யா மற்றும் ராஜு போரேஜ் ஆகியோர் தான்.  இந்த சம்பவம் அனைத்தும் யுவராஜ் கலண்டே வீட்டில்தான் நிகழ்ந்தது” என தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.





நடந்தது என்ன?


நடந்தது என்ன என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி “கடந்த 25ம் தேதியன்று ஸ்ரீரம்பூர் பகுதியில் உள்ள ஹரேகன் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் இடத்திற்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல், கட்டாயப்படுத்தி மிரட்டி 4 பேரை அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ஆடு மற்றும் கோழிகளை என திருடினீர்கள் என கேட்டு, சட்டையை கழற்றி மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்த கும்பலை சேர்ந்த ஒருவனே, இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளான். சம்பவம் தொடர்பாக கடத்தல், கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் குற்றச்சாட்டு: 


பிற்படுத்தப்பட்ட மக்களை காப்பாற்ற பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அவர்கள் தூண்டிவிட்ட வெற்று அரசியல் தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.