28 வயது கொண்ட இளைஞரின் உடல் உறுப்புகள் நான்கு பேருக்கு தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் 28 வயது கொண்ட சிகாலியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் இளைஞர் சமீபத்தில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், நுரையீரல் , சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக அளிக்க முன்வந்தனர்.
35 வயது இளைஞருக்கு பொருத்தப்பட்ட இதயம் :
28 வயது கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் இதயம் புனேவில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் மருத்துவமனையில் இருந்து விமானம் மூலம் சூரத் கொண்டு செல்லப்பட்டது. 7.30 மணியளவில் சூரத் மஹாவீர் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த குழு இதயத்தை பெற்றுக்கொண்டனர். அந்த இதயத்தை 35 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் காலை 8 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை மதியம் 1 மணி வரை நடத்தப்பட்டதாகவும் , வெற்றிகரமாக 28 வயது இளைஞரின் இதயம் 35 வயது இளைஞருக்கு பொருத்தப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தானம் கொடுக்கப்பட்ட கல்லீரல் , கிட்னி, நுரையீரல் :
மேலும் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் நுரையீரலானது 60 வயது முதியவருக்கு மாற்றுவதற்காக ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞரின் சிறுநீரகம் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டதாக டாக்டர் டிஒய் பாட்டீல் மருத்துவமனையின் மாற்று ஒருங்கிணைப்பாளர் மயூரி பார்கேய் தெரிவித்தார். மற்றொரு சிறுநீரகத்தை சாசூன் பொது மருத்துவமனையில் மற்றொரு நோயாளிக்கு பொருத்தியதாக தெரிவித்துள்ளனர். இளைஞரின் கல்லீரலை டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனையில் 65 வயது மூதாட்டிக்கு பொருத்தியுள்ளனர்.
இளைஞர் மர்ம மரணம் :
தஹி ஹண்டி திருவிழாவின் போது இளைஞர் தனது நண்பருடன் வெளியே சென்றிருக்கிறார். அடுத்த நாள் நண்பர் வீட்டில் படுத்திருந்தவர் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை என தெரிகிறது. மேலும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அது எப்படி ஏற்பட்டது என இன்னும் தெரியவில்லை என்கின்றனர் உறவினர்கள் . ஆகஸ்ட் 20 அன்று, 28 வயது இளைஞன் டாக்டர் டிஒய் பாட்டீல் மருத்துவமனையின் விபத்துப் பிரிவுக்குக் அவசரமாக அழைத்து வரப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதிப்படுத்தினர். பின்னர் உறவினர்களுக்கு ஆலோசனை கொடுத்து அவர்களின் சம்மதத்தின் அடிப்படையில் உடல் உறுப்பு தானத்திற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை செய்திருக்கிறது.