மத்தியப் பிரதேசத்தின் கச்சார் கிராமத்தில் நேற்று (ஆக.24) இரவு ஊர் பொதுக்குழாய் ஒன்றில் தண்ணீரோடு சேர்ந்து தீப்பிழம்பும் வெளிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீருடன் வெளியேறிய தீ!


மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ஸ்வாஹா பஞ்சாயத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கச்சார் அமைந்துள்ளது.


இந்நிலையில் பொதுக் குழாய் பம்ப் தண்ணீருடன் சேர்த்து தீயையும் கக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமவாசிகள் பயந்துபோய் இந்த வீடியோவில் முனகும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருப்பதாகவும், உள்ளூர் நிர்வாகம் விரைந்து குழு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






அறிவியல் காரணம் என்ன?


இச்சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக விளக்கப்படாத நிலையில், நிலத்திற்கு அடியில் இருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய மீத்தேன் வாயு வெளியிடப்பட்டிருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து முன்னதாகப் பேசிய போபால் அரசு அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஞானேந்திர பிரதாப் சிங், வண்டல் பாறைகளில் தாவரங்கள், விலங்குகளின் எச்சங்கள் சதுப்பு நிலத்தில் படிந்ததில் ஏற்பட்ட ரசாயன எதிர்வினையாக அங்கு மீத்தேன் உருவாகி இருக்கும் என்றும் அதனால் தீப்பிழம்புகள் வந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.






இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 






முன்னதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் தண்ணீருடன் சேர்த்து தீப்பிழம்புகளையும் பொழிந்த அருவியின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்ட நிலையில், மீத்தேன் வாயு வெளிப்பாடே அதற்கும் காரணம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது